பாடல் 204 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தனாதனன தானம் தனாதனன தானம் தனாதனன தானம் ...... தனதான |
இராவினிருள் போலும் பராவுகுழ லாலும் இராமசர மாகும் ...... விழியாலும் இராகமொழி யாலும் பொறாதமுலை யாலும் இராதஇடை யாலும் ...... இளைஞோர்நெஞ் சராவியிரு போதும் பராவிவிழ வேவந் தடாதவிலை கூறும் ...... மடவாரன் படாமலடி யேனுஞ் சுவாமியடி தேடும் அநாதிமொழி ஞானந் ...... தருவாயே குராவினிழல் மேவுங் குமாரனென நாளுங் குலாவியினி தோதன் ...... பினர்வாழ்வே குணாலமிடு சூரன் பணாமுடிக டோறுங் குடாவியிட வேலங் ...... கெறிவோனே துராலுமிகு தீமுன் பிராதவகை போலுந் தொடாமல்வினை யோடும் ...... படிநூறுஞ் சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ் சுவாமிமலை வாழும் ...... பெருமாளே. |
இரவின் இருட்டைப் போல் பரவி கருத்த கூந்தலினாலும், ராமனுடைய அம்பைப் போன்ற கூர்மையான கண்களாலும், இசை நிரம்பிய வார்த்தைகளாலும், பாரமான மார்பகங்களாலும், இடுப்பு இருக்கிறதோ இல்லையோ என்னும்படியான மெல்லிய இடையாலும், இளம் ஆண்களின் இதயத்தை ரம்பம் போல் அறுத்து, காலையும் மாலையும் அவர்கள் தங்களைத் துதிசெய்து வீழ்த்துமாறு வந்து, தகாதபடி அதிகமாக விலையைக் கூறி பேரம்செய்யும் விலைமகளிரின் ஆசையின் பிடியில் அகப்படாமல், அடியேனும் கடவுளாகிய உனது திருவடிகளைத் தேடும் ஆதியே இல்லாத ஞானமொழியை நீ எனக்குத் தந்தருள்வாயாக. (திருவிடைக்கழியிலுள்ள) குராமரத்தின் நிழலின்கீழ் அமர்ந்துள்ள குமாரக்கடவுளே என்று தினந்தோறும் அன்புற்று அன்போடு துதிக்கும் அடியார்களின் நிதியே, வீராவேசக் கூக்குரலிடும் சூரனின் பருத்த முடிகள் யாவும் குடைந்தெடுத்து வளைத்த வேலை அவ்விடத்தில் செலுத்தியவனே, காய்ந்த செத்தையும் மிகுத்து எரியும் நெருப்பின் முன்பு ஒன்றுமே இல்லாது வெந்து போகும் வகைபோல, தம்மை அணுகாது விலகிப்போகும்படி வினைகளைப் பொடிபடச் செய்யும் நல்வழிகளையே உட்கொள்ளும் ஞானத் தவசீலர்கள் சேர்ந்துள்ள சுவாமிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 204 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனாதனன, யாலும், தானம், போல், பெருமாளே, தேடும், ஞானந்