பாடல் 202 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தானதன தந்த தானன தானதன தந்த தானன தானதன தந்த தானன ...... தனதான |
ஆனனமு கந்து தோளொடு தோளிணைக லந்து பாலன ஆரமுது கண்டு தேனென ...... இதழூறல் ஆதரவி னுண்டு வேல்விழி பூசலிட நன்று காணென ஆனையுர மெங்கு மோதிட ...... அபிராம மானனைய மங்கை மார்மடு நாபியில்வி ழுந்து கீடமில் மாயுமனு வின்ப வாசைய ...... தறவேயுன் வாரிஜப தங்கள் நாயடி யேன்முடிபு னைந்து போதக வாசகம்வ ழங்கி யாள்வது ...... மொருநாளே ஈனவதி பஞ்ச பாதக தானவர்ப்ர சண்ட சேனைகள் ஈடழிய வென்று வானவர் ...... குலசேனை ஏவல்கொளு மிந்த்ர லோகவ சீகரவ லங்க்ரு தாகர ராசதம றிந்த கோமள ...... வடிவோனே சோனைசொரி குன்ற வேடுவர் பேதைபயில் கின்ற ஆறிரு தோளுடைய கந்த னேவய ...... லியில்வாழ்வே சூளிகையு யர்ந்த கோபுர மாளிகைபொ னிஞ்சி சூழ்தரு ஸ்வாமிமலை நின்று லாவிய ...... பெருமாளே. |
(விலைமாதர்களின்) முகத்தைக் கண்டு மகிழ்ந்து, தோளொடு தோள் சேரக் கலந்து, பால் போன்றதும், நிறை அமுதம், கல்கண்டு, தேன் என்னும்படியானதுமான வாய் இதழ் ஊறலை அன்புடன் அருந்தி, வேல் போன்ற கூரிய கண்கள் போர் புரிய, நன்றாகப் பார் என்னும்படியாக யானையைப் போன்ற மார்பகங்கள் நெஞ்சில் எங்கும் மோத, அழகிய மான் அனைய மாதர்களின் மடுப்போன்ற தொப்பூளில் விழுந்து புழு வண்டு போல இறந்துபடும் இம்மனித இன்ப ஆசையானது அற்று ஒழிய, உனது தாமரை போன்ற அடிகளை அடி நாயேனாகிய என் தலையில் சூட்டி, ஞானோபதேசம் செய்து ஆண்டருளும் ஒரு நாளும் உண்டோ? இழிவான மிக்க ஐந்து* மகா பாவங்களையும் செய்த அசுரர்களின் கொடிய சேனைகள் வலிமை அழிய வெற்றி கொண்டு, தேவர்களுடைய சிறந்த சேனையை ஆட்கொண்டு, இந்திர லோகத்தாரின் மனதைக் கவர்ந்த வசீகர சக்தி வாய்ந்தவனே, அழகு அலங்காரத்துக்கு இருப்பிடமானவனே, ராசத குணங்களின் தன்மையை உணர்ந்த அழகிய வடிவுள்ளவனே, விடாமழை பொழிகின்ற (வள்ளி) மலையில் வேடர் மகளாகிய வள்ளி அணைந்து விளையாடும் பன்னிரண்டு தோள்கள் உடைய கந்தப் பெருமானே, வயலூரில் வாழ்பவனே, நிலா முற்றங்களும், உயர்ந்த கோபுரங்களும், அழகிய மதில்களும் சூழ்ந்து விளங்கும் சுவாமி மலையில் எழுந்தருளி உலவும் பெருமாளே.
* ஐவகை பாதகங்கள்: கொலை, களவு, சூது, கள்ளுண்ணல், குரு நிந்தை ஆகியவை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 202 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, அழகிய, தானன, தந்த, வள்ளி, மலையில், கண்டு, தோளொடு, சேனைகள், பெருமாளே