பாடல் 201 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - ஜோன்புரி;
தாளம் - அங்கதாளம் - 18
தகிடதக-2 1/2, தகிடதக-2 1/2, தகிடதக-2 1/2
தகிடதக-2 1/2, தகதிமி-2, தகதிமி-2, தக-1
தகதிமிதக-3
தகிடதக-2 1/2, தகிடதக-2 1/2, தகிடதக-2 1/2
தகிடதக-2 1/2, தகதிமி-2, தகதிமி-2, தக-1
தகதிமிதக-3
தனாதன தனாதன தனாதன தனாதன தனாதனன தானந் ...... தனதானா |
அவாமரு வினாவசு தைகாணும டவாரெனு மவார்கனலில் வாழ்வென் ...... றுணராதே அராநுக ரவாதையு றுதேரைக திநாடும றிவாகியுள மால்கொண் ...... டதனாலே சிவாயவெ னுநாமமொ ருகாலுநி னையாததி மிராகரனை வாவென் ...... றருள்வாயே திரோதம லமாறும டியார்கள ருமாதவர் தியானமுறு பாதந் ...... தருவாயே உவாவினி யகானுவி னிலாவும யில்வாகன முலாசமுட னேறுங் ...... கழலோனே உலாவுத யபாநுச தகோடியு ருவானவொ ளிவாகுமயில் வேலங் ...... கையிலோனே துவாதச புயாசல ஷடாநந வராசிவ சுதாஎயினர் மானன் ...... புடையோனே சுராதிப திமாலய னுமாலொடு சலாமிடு சுவாமிமலை வாழும் ...... பெருமாளே. |
ஆசை ஏற்படுத்துகின்ற துன்பம் விளைவதற்கு மண்ணாசையும், விரும்பிப் பார்க்கின்ற இளம் மாதர்கள் என்ற பெண்ணாசையும் காரணமாம். அவர்களுடன் வாழ்க்கை நெருப்பின் மேல் வாழ்வு என்றுணராமல் பாம்பின் வாயில் அகப்பட்டு துன்பமுறு தவளையின் கதி அடைந்த அந்நிலையிலும் இன்பத்தை நாடும் அறிவுடையவனாகி உள்ளத்தில் மயக்கம் கொண்டு அதன் காரணமாக சிவாய என்ற திருமந்திரத்தை ஒருபோதும் நினைக்காத அஞ்ஞான இருளுக்கு இருப்பிடமாக உள்ள அடியேனை, உன் திருவடியில் சேர்ந்து இன்புற வருக என்றழைத்து அருள்வாயாக. உன்னை மறத்தல் என்ற குற்றம் இல்லாத மெய்யடியார்களாலும், அரிய பெரிய தவ முனிவர்களாலும் தியானம் செய்யப்படும் உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக. இளமைமிகுந்து, இனிய கானகத்தில் ஒளிவீசித் திரியும் மயிலை வாகனமாகக் கொண்டு, அதன்மீது குதூகலத்துடன் ஏறும் வீரக் கழலோனே, வானில் உலாவும் உதய சூரியர்கள் நூறு கோடி கூடினாற்போல ஒளிபடைத்த அழகிய கூர் வேல் திருக்கரத்துள்ளோனே, பன்னிரண்டு மலைபோன்ற புயங்களை உடையவனே, ஆறுமுகக் கடவுளே, சிறந்தவனே, சிவனின் சேயே, வேடர் குலத்து மான் போன்ற வள்ளியிடம் அன்புடையவனே, தேவேந்திரனும், திருமாலும், பிரம்மனும் அன்போடு வணக்கம் செய்கின்ற சுவாமிமலையில் வாழ்கின்ற பெருமாளே.
* 'சலாம்' என்ற முகம்மதியர்களின் உருதுச் சொல்லை இங்கு சுவாமிகள் பயன்படுத்துகிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 201 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தகிடதக, தனாதன, கொண்டு, பெருமாளே, கழலோனே, தகதிமி