பாடல் 168 - பழநி - திருப்புகழ்

ராகம் - பைரவி; தாளம் -
திஸ்ர ஏகம் - 3 - எடுப்பு - 1/2 இடம்
தனன தனன தனன தனன தனன தனன ...... தனதான |
திமிர வுததி யனைய நரக செனன மதனில் ...... விடுவாயேல் செவிடு குருடு வடிவு குறைவு சிறிது மிடியு ...... மணுகாதே அமரர் வடிவு மதிக குலமு மறிவு நிறையும் ...... வரவேநின் அருள தருளி யெனையு மனதொ டடிமை கொளவும் ...... வரவேணும் சமர முகவெ லசுரர் தமது தலைக ளுருள ...... மிகவேநீள் சலதி யலற நெடிய பதலை தகர அயிலை ...... விடுவோனே வெமர வணையி லினிது துயிலும் விழிகள் நளினன் ...... மருகோனே மிடறு கரியர் குமர பழநி விரவு மமரர் ...... பெருமாளே. |
இருண்ட கடல் போன்றதும், நரகத்திற்கு ஒப்பானதும் ஆன பிறப்பு என்பதில் நீ என்னை விழும்படியாகச் செய்தால், செவிடு, குருடு, அங்கஹீனம், சிறிதேனும் வறுமை என்பவை ஏதும் இல்லாது, தேவ லக்ஷணமும், உயர் குடிப்பிறப்பும், அறிவும், நீதி ஒழுக்கமும் எனக்கு வருமாறு உனது திருவருளைத் தந்தருளி, என்னையும் நீ மனம்வைத்து உன் அடிமையாக ஆட்கொள்ள வரவேண்டும். போர்க்களத்தில் வெல்லப்பட்ட அசுரர்களின் தலைகள் உருளும்படியாக, மிகப் பெரிய கடல் அலறும்படியாக, நீண்டுயர்ந்த கிரெளஞ்சமலை பொடியாக, வேலினைச் செலுத்தியவனே, பாம்புப் படுக்கையில் இனிதே துயிலும் தாமரைக்கண்ணன் திருமால் மருகனே, கண்டம் கறுத்த (நீலகண்ட) சிவனின் குமரனே, பழனியில் வந்து தொழும் தேவர்களின் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 168 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பெருமாளே, கடல், துயிலும், வடிவு, குருடு, செவிடு