பாடல் 167 - பழநி - திருப்புகழ்

ராகம் - பந்துவராளி; தாளம்
- கண்டசாபு - 2 1/2
தனதனனத் தனதனனத் தனதனனத் ...... தனதான தனதனனத் தனதனனத் தனதனனத் ...... தனதான |
திடமிலிசற் குணமிலிநற் றிறமிலியற் ...... புதமான செயலிலிமெய்த் தவமிலிநற் செபமிலிசொர்க் ...... கமுமீதே இடமிலிகைக் கொடையிலிசொற் கியல்பிலிநற் ...... றமிழ்பாட இருபதமுற் றிருவினையற் றியல்கதியைப் ...... பெறவேணும் கெடுமதியுற் றிடுமசுரக் கிளைமடியப் ...... பொரும்வேலா கிரணகுறைப் பிறையறுகக் கிதழ்மலர்கொக் ...... கிறகோடே படர்சடையிற் புனைநடனப் பரமர்தமக் ...... கொருபாலா பலவயலிற் றரளநிறைப் பழநிமலைப் ...... பெருமாளே. |
உன் அருளில் ஈடுபடும் உறுதி இல்லாதவன் யான், நல்ல குணங்கள் ஏதும் இல்லாதவன் யான், தொண்டுகள் செய்வதற்கு ஆற்றல் இல்லாதவன் யான், வியக்கத்தக்க அரும் செயலைச் செய்யாதவன் யான், மெய்யறிவோடு கூடிய தவம் ஒன்றும் செய்யாதவன் யான், நன்மையை நல்கும் ஜபம் ஏதும் செய்யாதவன் யான், சொர்க்க உலகத்தில் இடம்பெறத் தகுதி இல்லாதவன் யான், கரங்களால் ஒரு தானமும் கொடுத்தறியாதவன் யான், உன்னை நல்ல தமிழ்ப்பாடலால் பாடுதற்கு ஏற்ற சொல்வன்மை இல்லாதவன் யான், (இத்தகைய குறைபாடுகள் உள்ள அடியேன்) உனது இரண்டு திருவடிகளையும் அடைந்து நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளும் தீர்ந்து உயர்ந்த முக்தி நிலையைப் பெற்று உய்ய வேண்டும். தீய புத்தியே உடையவர்களாகிய அசுரர்களது வம்சமே அழியுமாறு போர் புரிந்த வேலனே, ஒளிபடைத்த இளம்பிறைச் சந்திரன், அறுகம்புல், ருத்திராக்ஷம், வில்வ இதழ், கொன்றை மலர், கொக்கின் இறகு முதலியவற்றை விரிந்த சடைமுடியில் தரித்துக் கொண்டிருப்பவரும் ஆனந்தத் தாண்டவம் புரிபவருமான பரமசிவன் பெற்ற ஒப்பற்ற குமாரனே, குறையின்றிப் பயன் தரும் வயல்களில் முத்துக்கள் நிறைந்த பழநி மலையில் எழுந்தருளிய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 167 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - யான், தனதனனத், இல்லாதவன், செய்யாதவன், ஏதும், நல்ல, தனதான, பெருமாளே