பாடல் 165 - பழநி - திருப்புகழ்

ராகம் - ஹமீர் கல்யாணி;
தாளம் - ஆதி - 12
தனன தனன தனன தனன தனன தனன ...... தனதான |
தமரு மமரு மனையு மினிய தனமு மரசும் ...... அயலாகத் தறுகண் மறலி முறுகு கயிறு தலையை வளைய ...... எறியாதே கமல விமல மரக தமணி கனக மருவு ...... மிருபாதங் கருத அருளி யெனது தனிமை கழிய அறிவு ...... தரவேணும் குமர சமர முருக பரம குலவு பழநி ...... மலையோனே கொடிய பகடு முடிய முடுகு குறவர் சிறுமி ...... மணவாளா அமர ரிடரு மவுண ருடலு மழிய அமர்செய் ...... தருள்வோனே அறமு நிறமு மயிலு மயிலு மழகு முடைய ...... பெருமாளே. |
சுற்றத்தாரும், அவர்கள் கூடி இருக்கும் இல்வாழ்க்கையும், இனிமையான செல்வமும், ஆட்சியும் என்னை விட்டு விலகிப் போகும்படியாக, கொடுமையான யமன் திண்ணிய பாசக்கயிற்றைக் கொண்டு தலையைச் சுற்றி வளைப்பதற்கு எறியாமல் இருக்க, தாமரை போன்றும், பரிசுத்தமான, மரகதமணி போலவும், தங்கத்தைப் போலவும் விளங்கும் உன்னிரு திருவடிகளை நான் நினைத்துக்கொண்டே இருக்குமாறு அருளி, என் திக்கற்ற தனிமை நீங்கும்படி அறிவைத் தந்தருள வேண்டும். குமரா, போர் வீரா, முருகா, பரமனே, விளங்கும் பழனிமலை வாசனே, மதம் பிடித்த யானையை (வள்ளியை பயமுறுத்தி உன்னை அணையவைக்கவேண்டும் என்ற) உன் கருத்து நிறைவேற எதிரே வரச் செய்தவனே, குறப்பெண் வள்ளியின் மணவாளனே, தேவர்களின் துன்பமும், அசுரர்களின் உடலும் ஒன்றாக அழியும்படி போர் செய்து அருளியவனே, தர்மமும், செந்நிறமும், வேலும், மயிலும், அழகும் உடைய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 165 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - விளங்கும், போர், போலவும், பெருமாளே, தனிமை, மயிலு, அருளி