பாடல் 160 - பழநி - திருப்புகழ்

ராகம் - நாட்டகுறிஞ்சி;
தாளம் - சதுஸ்ர த்ருவம்
- எடுப்பு /4/4/40 , கண்டநடை - 35
- எடுப்பு /4/4/40 , கண்டநடை - 35
தனதனன தானந்த தத்ததன தானதன தனதனன தானந்த தத்ததன தானதன தனதனன தானந்த தத்ததன தானதன ...... தனதான |
சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞானசிவ சமயவடி வாய்வந்த அத்துவித மானபர சுடரொளிய தாய்நின்ற நிட்களசொ ரூபமுத ...... லொருவாழ்வே துரியநிலை யேகண்ட முத்தரித யாகமல மதனில்விளை யாநின்ற அற்புதசு போதசுக சுயபடிக மாவின்ப பத்மபத மேஅடைய ...... உணராதே கருவிலுரு வேதங்கு சுக்கிலநி தானவளி பொருமஅதி லேகொண்ட முக்குணவி பாகநிலை கருதவரி யாவஞ்ச கக்கபட மூடியுடல் ...... வினைதானே கலகமிட வேபொங்கு குப்பைமல வாழ்வுநிஜ மெனவுழலு மாயஞ்செ னித்தகுகை யேஉறுதி கருதசுழ மாமிந்த மட்டைதனை யாளஉன ...... தருள்தாராய் ஒருநியம மேவிண்ட சட்சமய வேதஅடி முடிநடுவு மாயண்ட முட்டைவெளி யாகியுயி ருடலுணர்வ தாயெங்கு முற்பனம தாகஅம ...... ருளவோனே உததரிச மாமின்ப புத்தமிர்த போகசுக முதவுமம லாநந்த சத்திகர மேவுணர வுருபிரண வாமந்த்ர கர்த்தவிய மாகவரு ...... குருநாதா பருதிகதி ரேகொஞ்சு நற்சரண நூபுரம தசையநிறை பேரண்ட மொக்கநட மாடுகன பதகெருவி தாதுங்க வெற்றிமயி லேறுமொரு ...... திறலோனே பணியுமடி யார்சிந்தை மெய்ப்பொருள தாகநவில் சரவணப வாவொன்று வற்கரமு மாகிவளர் பழநிமலை மேனின்ற சுப்ரமணி யாவமரர் ...... பெருமாளே. |
வேதங்களின் முடிவில் விளங்கும் மெளன நிலையை உபதேசித்து அருளும் முற்றறிவுடைய பெரிய பொருளே, அறிவுடன் கூடிய சைவ சமயத் திருமேனி தாங்கி எழுந்தருளி வந்த, இரண்டறக் கலந்திருக்கின்ற பரம் பொருளே, ஒளிக்குள் ஒளியாய் நிற்கின்ற உருவம் இல்லாதவனே, அருள் வடிவம் உடையவனே, முதற் பொருளே, ஒப்பற்ற சிவானந்தப் பெரு வாழ்வே, துரிய நிலையில் தன் மயமாய் நிற்கும் உண்மைப் பொருளைக் கண்ட ஜீவன்முக்தர்களுடைய இதயத் தாமரையில், விளைகின்றதும், ஆச்சரியத்தை விளைவிப்பதும், மேலான ஞானத்தைத் தருவதும், சுகத்தைத் தருவதும், சுயமான படிகம் போன்ற தூய இன்பத்தை உண்டாக்குவதும், தாமரைக்கு நிகரானதுமான உன் திருவடிகளை அடைந்துய்யும் நெறியை அடியேன் உணராமல், (தாயின்) கர்ப்பத்தில் உருவாகித் தங்கிய (தந்தையின்) சுக்கிலத்தோடு பிராண வாயு வந்து பூரிக்க, அவ்வுருவத்தில் பொருந்திய சத்துவ, இராஜச, தாமசம் என்னும் மூன்று குணங்களின் வேறு பாடுடைய அளவான நிலையை, நினைப்பதற்கு முடியாத வஞ்சனையுடன் கூடிய கபட குணத்தால் (அவ்வுருவம்) மூடப்பட்டு, உடலினால் வந்த தீ வினைகள் கலகங்களைச் செய்ய, மிகுந்த குப்பையான மும்மலத் தொடர்பால் வந்த (அநித்திய) வாழ்வையே நிலைத்தது என்று திரிபவனும், மாயா குணங்கட்குப் பிறப்பிடமான இவ்வுடலையே அழிவற்றது எனக் கருதும் நாய்க்குச் சமமானவனுமாகிய, மூடனாகிய இவ்வடியேனை ஆட்கொள்ள நீ அருள் புரிவாயாக. ஒரு விதியையே கூறுகின்ற ஆறு சமயங்களைத் தன்னகத்தே கொண்ட வேதத்தின் முதலும் முடிவும் நடுவுமாகி, உருண்டை வடிவமாக உள்ள அண்டங்களாகவும் அதற்கப்பாலுள்ள பெரு வெளியாகவுமாகி, ஆன்மாக்களின் உயிருக்கு உயிராகவும் உடலாகவும் அறிவுமாகி, யாண்டும் நீக்கமற நிறைந்து தோன்றுபவனுமாகி உள்ள நித்தியப் பொருளே, தண்ணீர் ஊற்றெடுப்பது போல மாறாத இன்பத்தை நல்கும் புதிய அமிர்தத்தை ஒத்த சிவலோகப் பேரின்ப நலத்தை வழங்குகின்ற மலமில்லாத இன்ப வடிவான எம் பெருமானே, சக்திவேற் படையைக் கையில் ஏந்தி இருப்பவனே, பொருந்திய அறிவுருவமாகிய அந்தப் பிரணவ மந்திரத்திற்கு முதன்மைப் பொருளாக எழுந்தருளி வருகின்ற குருநாதனே, சூரியப் பிரகாசத்தை இனிது வெளிப்படுத்தும், நன்மையைத் தரும் உனது திருவடிகளின் தண்டைகள் அசைந்து இனிது ஒலி செய்ய, நிறைந்த பெரிய அண்டங்களில் எல்லாம் ஒருங்கு அசைய நடனம் செய்கின்ற பெருமை பொருந்திய அடிகளை உடைமையால் செருக்குள்ளதும், பரிசுத்தமும் வெற்றியும் கொண்டுள்ளதுமான மயில்மீது ஏறும் ஒப்பற்ற ஆற்றல் உடையவனே, உன்னை வணங்கும் அடியவர்களுடைய உள்ளம் இதுவே உண்மைப் பொருள் என்று சொல்லுகின்ற சரவணபவா என்னும் ஆறெழுத்துக்கள் பொருந்திய (அஞ்ஞான இருளை நீக்கும்) வலியுடைய பேரொளியாகி வளர்கின்ற பழநி மலை மேல் வீற்றிருக்கின்ற சுப்பிரமணியனே, தேவர்கள் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 160 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பொருந்திய, பொருளே, தனதனன, வந்த, தானதன, தானந்த, தத்ததன, தருவதும், இன்பத்தை, செய்ய, இனிது, உள்ள, உண்மைப், என்னும், அருள், பெரிய, நிலையை, பெருமாளே, கூடிய, எழுந்தருளி, ஒப்பற்ற, உடையவனே, பெரு