பாடல் 155 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தந்தன தானன தத்தத் தந்தன தந்தன தானன தத்தத் தந்தன தந்தன தானன தத்தத் தந்தன ...... தனதான |
சிந்துர கூரம ருப்புச் செஞ்சரி செங்கைகு லாவந டித்துத் தென்புற செண்பக மாலைமு டித்துப் பண்புள ...... தெருவூடே சிந்துகள் பாடிமு ழக்கிச் செங்கய லம்புகள் போலவி ழித்துச் சிங்கியில் செம்பவ ளாடைது லக்கிப் பொன்பறி ...... விலைமாதர் வந்தவ ராரென ழைத்துக் கொங்கையை யன்புற மூடிநெ கிழ்த்திக் கண்பட மஞ்சணி ராடிமி னுக்கிப் பஞ்சணை ...... தனிலேறி மந்திர மோகமெ ழுப்பிக் கெஞ்சிட முன்றலை வாயில டைத்துச் சிங்கிகொள் மங்கைய ராசைவி லக்கிப் பொன்பத ...... மருள்வாயே இந்திர நீலவ னத்திற் செம்புவி யண்டக டாகம ளித்திட் டண்டர்க ளெண்படு சூரைய ழித்துக் கொண்டரு ...... ளொருபேடி இன்கன தேரைந டத்திச் செங்குரு மண்டல நாடும ளித்துப் பஞ்சவ ரின்புறு தோழ்மையு டைக்கத் தன்திரு ...... மருகோனே சந்திர சூரியர் திக்கெட் டும்புக ழந்தமில் வாழ்வது பெற்றுத் தங்கிய சங்கர னார்செவி புக்கப் பண்பருள் ...... குருநாதா சம்ப்ரம மானகு றத்திக் கின்புறு கொங்கையின் மேவுச மர்த்தச் சுந்தர தண்டமிழ் சேர்பழ நிக்குட் டங்கிய ...... பெருமாளே. |
யானையின் கூரிய தந்தம் போன்ற தனங்களும், செம்மையாக சரிந்துள்ள வளைகள் அணிந்துள்ள சிவந்த கரங்களும் குலுங்குமாறு நடனமாடி, உற்சாகத்துடன் செண்பகப் பூமாலை முடித்து, அழகிய தெரு வழியில் சிந்து என்னும் இசைப்பா வகையில் பாடல்களைப் பாடி முழக்கமிட்டு, செவ்விய கயல் மீன் போன்ற கண்களை விழித்து சிங்கத்தின் இடை போன்ற இடையில் சிவந்த பவளம் போன்ற ஆடையை உடுத்து, பொருளைப் பறிக்கின்ற பொது மகளிர். வந்தவர்கள் யார் என விசாரித்து தனங்களை அன்புடன் மூடியும், (கச்சுக் கட்டைத்) தளர்த்தியும், கண்ணில் தெரியும்படி மஞ்சள் நீராடி மினுக்கியும், பஞ்சணை மீதில் ஏறி மந்திர சக்தி போல் விரைவில் ஆசையை உண்டாக்கி (வந்தவரைக்) கெஞ்சும்படி வைத்து, முன் புறத்தில் உள்ள வாயிற் கதவை அடைத்து நாணம் இன்மையைக் கொண்ட மாதர்கள் மீது எனக்குள்ள ஆசையை விலக்கி, உனது அழகிய திருவடியைத் தந்து அருளுக. இந்திரனது காவலில் இருந்த இருண்ட காண்டவ வனத்தில் (இருந்த அரக்கர்களை எரி ஊட்டியும்), செவ்விய பூமி முதல் அண்ட கோளத்தில் இருந்தவர்களை (அவுணர்களின் துன்புறுத்தலிலிருந்தும்) காப்பாற்றியும், தேவர்களின் எண்ணத் தக்க துன்பத்தை நீக்கி, அவர்கள் நாட்டைத் திரும்பித் தந்து அருளியும், ஒப்பற்ற பேடியாகிய* அர்ச்சுனனுடைய அழகிய தேரை (சாரதியாய்) நடத்தியும், செம்மையான குரு மண்டல நாட்டைப் பாண்டவர்களுக்குத் தந்து அப்பாண்டவர் ஐவரின் இன்புறு நட்பைப் பூண்டிருந்த தலைவனான திருமாலின் அழகிய மருகனே, சந்திரனும் சூரியனும், திக்குகள் எட்டு இவை யாவும் புகழும் முடிவு இல்லா வாழ்வைப் பெற்று விளங்கும் சிவ பெருமானின் திருச்செவியில் புகும்படி பிரணவத்தை உபதேசித்தருளிய குரு மூர்த்தியே, சிறப்பு மிக்க குறத்தியாகிய வள்ளியின் இன்பம் பொலியும் மார்பகத்தை விரும்பி மேவும் சாமர்த்திய அழகனே, தண்ணிய தமிழ் வழங்கும் பழனி மலையில் தங்கி வீற்றிருக்கும் பெருமாளே.
* பாண்டவரின் வனவாசத்தின் கடைசி ஆண்டில் அர்ச்சுனன் ஒரு பேடி உருவில் அஞ்ஞாதவாசம் புரிந்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 155 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தன, அழகிய, தந்து, தத்தத், தானன, செவ்விய, இருந்த, குரு, ஆசையை, பெருமாளே, லக்கிப், பஞ்சணை, மந்திர, மண்டல, சிவந்த