பாடல் 151 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தந்தத் தனதன தனனா தனனா தந்தத் தனதன தனனா தனனா தந்தத் தனதன தனனா தனனா ...... தனதான |
கொந்துத் தருகுழ லிருளோ புயலோ விந்தைத் தருநுதல் சிலையோ பிறையோ கொஞ்சிப் பயில்மொழி அமுதோ கனியோ ...... விழிவேலோ கொங்கைக் குடமிரு கரியோ கிரியோ வஞ்சிக் கொடியிடை துடியோ பிடியோ கொங்குற் றுயரல்கு லரவோ ரதமோ ...... எனுமாதர் திந்தித் திமிதிமி திமிதா திமிதோ தந்தித் திரிகட கிடதா எனவே சிந்திப் படிபயில் நடமா டியபா ...... விகள்பாலே சிந்தைத் தயவுகள் புரிவே னுனையே வந்தித் தருள்தரு மிருசே வடியே சிந்தித் திடமிகு மறையா கியசீ ...... ரருள்வாயே வெந்திப் புடன்வரு மவுணே சனையே துண்டித் திடுமொரு கதிர்வே லுடையாய் வென்றிக் கொருமலை யெனவாழ் மலையே ...... தவவாழ்வே விஞ்சைக் குடையவர் தொழவே வருவாய் கஞ்சத் தயனுட னமரே சனுமே விந்தைப் பணிவிடை புரிபோ தவர்மே ...... லருள்கூர்வாய் தொந்திக் கணபதி மகிழ்சோ தரனே செங்கட் கருமுகில் மருகா குகனே சொந்தக் குறமகள் கணவா திறல்சேர் ...... கதிர்காமா சொம்பிற் பலவள முதிர்சோ லைகள்சூழ் இஞ்சித் திருமதிள் புடைசூ ழருள்சேர் துங்கப் பழநியில் முருகா இமையோர் ...... பெருமாளே. |
பூங்கொத்துக்கள் உள்ள கூந்தல் இருட்டோ, மேகமோ? விசித்திரமான நெற்றி வில்லோ, பிறைச் சந்திரனோ? கொஞ்சிப் பேசும் பேச்சு அமுதமோ அல்லது பழமோ? கண் வேலாயுதமோ? மார்பகங்களாகிய குடங்கள் இரண்டு யானைகளோ, மலைகளோ? வஞ்சிக் கொடி போன்ற இடுப்பு உடுக்கையோ, ஒரு பிடியில் அடங்குவதோ? வாசனை கொண்டு உயர்ந்த பெண்குறி பாம்போ, ரதமோ என்று உவமை கூறத் தக்க விலைமாதர்கள். திந்தித் திமிதிமி திமிதா திமிதோ தந்தித் திரிகிட கிடதா என்ற ஒலியுடன் சிந்து எனப்படும் இசைப் பாடல்களை இவ்வண்ணம் பயின்று நடனம் செய்கின்ற பாவியர்களாகிய வேசியரிடத்தே மனம் அன்பு கூர்ந்த செயல்களைச் செய்பவனாகிய அடியேன் உன்னையே வணங்கி திருவருளைப் பாலிக்கும் உனது இரண்டு திருவடிகளை தியானிக்க சிறந்த ரகசியமாகிய உபதேசப் பொருளை அருள்வாயாக. உடை வாள், அம்பராத்தூணி முதலிய கட்டுக்களுடன் போருக்கு வந்த அசுரர் தலைவனாகிய சூரபத்மனை வெட்டிய ஒப்பற்ற ஒளி வீசும் வேலை உடையவனே, வெற்றிக்கு ஒரு மலை இவன் என்று சொல்லும்படி வாழ்கின்ற ஞானமலையே, தவ சீலர்களுக்கு வாழ்வே, ஞான வித்தைக்கு உரியவர்கள் தொழும்படி வருபவனே, தாமரை மலர் மீது உறையும் பிரம தேவரும் இந்திரனும் அழகிய திருத் தொண்டுகள் செய்யும்போது அவர்கள்பால் மிகுதியாக அருள் சுரப்பவனே, தொந்தியை உடைய கணபதி மகிழும் தம்பியே, சிவந்த கண்களை உடைய, மேகம் போன்ற கரிய, திருமாலின் மருகனே, உனக்குச் சொந்தமான குறப் பெண் வள்ளியின் கணவனே, திறமை வாய்ந்த கதிர் காமத்தில் உறைபவனே, அழகு வாய்ந்த பல வனங்கள் நிறைந்த, சோலைகள் சூழ்ந்துள்ள, கோட்டையும் அழகிய மதில்களும் அருகில் சுற்றியிருந்து அருள் பாலிப்பதும் பெருமை வாய்ந்ததுமான பழனி மலை மேல் வீற்றிருக்கும் முருகனே, தேவர்களின் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 151 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனா, தந்தத், தனதன, பெருமாளே, கணபதி, இரண்டு, அருள், வாய்ந்த, உடைய, கிடதா, அழகிய, திமிதோ, வஞ்சிக், கொஞ்சிப், ரதமோ, திந்தித், திமிதா, திமிதிமி, தந்தித்