பாடல் 150 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தந்தம் தந்தம் தந்தம் தந்தம் தனதன தனதன தனதன தனதன தந்தம் தந்தம் தந்தம் தந்தம் தனதன தனதன தனதன தனதன தந்தம் தந்தம் தந்தம் தந்தம் தனதன தனதன தனதன தனதன ...... தனதான |
குன்றுங் குன்றுஞ் செண்டுங் கன்றும் படிவளர் முலையினில் ம்ருகமத மெழுகியர் இந்துஞ் சந்தந் தங்குந் தண்செங் கமலமு மெனவொளிர் தருமுக வநிதையர் கொஞ்சுங் கெஞ்சுஞ் செஞ்சும் வஞ்சஞ் சமரச முறவொரு தொழில்வினை புரிபவர் ...... விரகாலும் கும்பும் பம்புஞ் சொம்புந் தெம்புங் குடியென வளர்தரு கொடியவர் கடியவர் எங்கெங் கெம்பங் கென்றென் றென்றுந் தனதுரி மையதென நலமுட னணைபவர் கொஞ்சந் தங்கின் பந்தந் தெந்தன் பொருளுள தெவைகளு நயமொடு கவர்பவர் ...... மயலாலும் என்றென் றுங்கன் றுந்துன் புங்கொண் டுனதிரு மலரடி பரவிட மனதினில் நன்றென் றுங்கொண் டென்றுஞ் சென்றுந் தொழுமகி மையினிலை யுணர்வினி னருள்பெற இன்பும் பண்புந் தெம்புஞ் சம்பந் தமுமிக வருள்பெற விடைதரு விதமுன ...... மருள்வாயே எங்குங் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன் அவன்விடு மதிசய வினையுறு மலகையை வென்றுங் கொன்றுந் துண்டந் துண்டஞ் செயுமரி யொருமுறை யிரணிய வலனுயிர் நுங்குஞ் சிங்கம் வங்கந் தன்கண் துயில்பவ னெகினனை யுதவிய கருமுகில் ...... மருகோனே ஒன்றென் றென்றுந் துன்றுங் குன்றுந் தொளைபட மதகரி முகனுடல் நெரிபட டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண் டிடியென விழுமெழு படிகளு மதிர்பட ஒண்சங் கஞ்சஞ் சஞ்சஞ் சஞ்சென் றொலிசெய மகபதி துதிசெய அசுரரை ...... யடுவோனே உந்தன் தஞ்சந் தஞ்சந் தஞ்சஞ் சிவனருள் குருபர வெனமுநி வரர்பணி யுந்தொந் தந்தொந் தந்தொந் தந்தென் றொலிபட நடமிடு பரனரு ளறுமுக உண்கண் வண்டுங் கொண்டுந் தங்கும் விரைபடு குரவல ரலர்தரு மெழில்புனை ...... புயவீரா அன்றென் றொன்றுங் கொண்டன் பின்றங் கடியவர் தமையிகழ் சமணர்கள் கழுவினில் அங்கஞ் சிந்தும் பங்கந் துஞ்சும் படியொரு தொகுதியி னுரைநதி யெதிர்பட அன்பின் பண்பெங் குங்கண் டென்பின் அரிவையை யெதிர்வர விடுகவி புகல்தரு ...... திறலோனே அண்டங் கண்டும் பண்டுண் டும்பொங் கமர்தனில் விஜயவ னிரதமை நடவிய துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன் தருமகன் முநிதழல் வருதக ரிவர்வல அங்கங் கஞ்சஞ் சங்கம் பொங்குங் கயநிறை வளமுறு சிவகிரி மருவிய ...... பெருமாளே. |
மலையும் வளர்ச்சி குறைந்து இருக்கும்படியும், பூச்செண்டும் வாடும்படியாகவும் வளர்ந்த மார்பகத்தில் கஸ்தூரிக் கலவை பூண்பவர். சந்திரனைப் போலவும் அழகு தங்கும் குளிர்ச்சியும் சிவப்பு நிறமும் பொருந்திய தாமரை போன்று விளங்கும் முகத்தைக் கொண்ட (விலை) மாதர்கள். கொஞ்சுதலும், கெஞ்சிக் கேட்பதும் செய்தும், வஞ்சகமாக, சமாதானம் வரும்படி, ஒப்பற்ற செயல்களைப் புரியும் மாதர். சூழ்ச்சியாலும், கும்பல் கூடியிருத்தலும், வேடிக்கையும், அழகும், ஆணவமும் (இக்குணங்கள்) தம்முள் குடிவளர்த்துள்ள பொல்லாதவர்கள். கடுமையானவர்கள். எங்கே, எங்கே எமக்கு உரிய பங்கு என்று கூறி, எப்போதும் தமக்குச் சொந்தமானது என்று நிலை நிறுத்தி, பின் நலம் பேசி அணைபவர். கொஞ்சமே உள்ள இன்பத்தைக் கொடுத்து என்னிடம் உள்ள பொருள் அனைத்தையும் சாமர்த்தியமாக கவர்ந்து கொள்பவர்கள். காம இச்சையாலும், எந்த நாளும் மனம் இரங்கி நொந்து போதலையும், துன்பத்தையும் கொண்டுள்ள நான் உனது மலர் போன்ற இரு திருவடியை போற்றுதற்கும், மனத்தில் நல்லது என்று எப்பொழுதும் அறிந்து என்றும் (உன் திருக்கோயிலுக்குச்) சென்று தொழுகின்ற பெருமையின் பண்பை என் அறிவில் நின் அருளால் நான் பெறவும், இன்பமும் நற்பண்பும் உற்சாகமும் உனது தொடர்பும் சேர்ந்து நிரம்பும்படியான அருளைப் பெறவும் நீ அனுமதி செய்யும் வழியை முன்னதாகக் காட்டி அருள் புரிவாயாக. பயத்தால் ஏங்கிய கம்சன் வஞ்சகன், அற்பன். (கண்ணனைக் கொல்லும் பொருட்டு) அவன் ஏவிய அதிசயமான செயலை உடைய (பூதனை என்ற) பேயை வெற்றி கொண்டு, கொன்று, துண்டம் துண்டமாகச் செய்த திருமால், ஒரு காலத்தில் இரணியன் என்னும் வலியவனுடைய உயிரை உண்ட நரசிங்க வடிவினர், ஆதிசேஷனாகிய தோணி மேல் (பாற்கடலில்) துயில் கொள்பவர், அன்ன வாகனனாகிய பிரம தேவனைப் பெற்ற கரிய மேக நிறம் கொண்ட திருமாலின் மருகனே, நிகரில்லாத சூரிய மண்டலம் வரை உயர்ந்து நின்ற கிரெளஞ்ச மலை பிளக்கும்படியும், மதம் பொழியும் யானை முகமுடைய தாரகாசுரனது உடம்பு நெரிபட்டு அழியவும், டுண் டுண் டுண் டுண் டிண் டிண் டிண் டிண் டிடி என்ற ஒலியுடன், விழும்படியான நிலையில் இருந்த ஏழு உலகங்களும் அதிர்ச்சி கொள்ளவும், ஒள்ளிய சங்கம் சஞ்சம் சஞ்சம் என்று ஒலிக்கவும், இந்திரன் வணங்கவும் அசுரர்களை மாய்த்தவனே, நீயே முக்காலும் அடைக்கலம், சிவனுக்கு அருளிய ஞான மூர்த்தியே என்று முனிவர்கள் பணியும், தொம்தம் தொம்தம் என்ற தாளத்தோடு ஒலி பரவ நடம் செய்யும் சிவபெருமான் அருளிய ஆறுமுகனே, தேன் உண்ணுகிற இடத்தில் வண்டுகளைக் கொண்டு விளங்க, வாசனை வீசுகின்ற குரா மலர்கள் மலரும், அழகு செய்கின்ற தோள்களை உடைய வீரனே, பிற மதங்கள் முக்தி வழி அன்று என்று கூறி தங்கள் நெறி ஒன்றையே கொண்டு அன்பு இல்லாமல் அங்கு அடியவர்களை இகழ்ந்து பேசிய சமணர்களை கழுவில் அவர்கள் உடல் சிந்தும்படியும், குறைபட்டு மாளும்படியும் செய்து, ஒரே வெள்ளமாய் நுரைத்து வந்த வைகையாற்றில் ஏடுகள் எதிர் வரச் செய்து, (அத்தகைய செயல்களால்) சிவத்தின் தன்மையை எங்கும் பரவச் செய்து, எலும்பிலிருந்து பூம்பாவையை எதிரில் உயிரோடு வரும்படி செய்த கவி பாடிய திருஞானசம்பந்தராக வந்து தேவார திருப்பதிகத்தைத் திருவாய் மலர்ந்து அருளிய சமர்த்தனே, அண்டங்களை உண்டாக்கியும், முன்னொரு நாளில் அவற்றை உண்டும், முடுகி வந்த போரில் அருச்சுனனின் ரதத்தைத் (தேர்ப் பாகனாக வந்து) செலுத்திய பரிசுத்த மூர்த்தி, தீயாரை வஞ்சம் புரிந்து அழிப்பவரும், பாஞ்ச ஜன்யம் என்ற சங்கை உடையவரும் ஆகிய திருமாலின் புதல்வராகிய பிரம்ம தேவருடைய புத்திரரான நாரத முனிவர் புரிந்த வேள்வியில் பிறந்த ஆட்டுக் கடாவின் மீது ஏறுகின்ற வல்லவனே, தமது அடையாள உறுப்பாக தாமரையும், சங்கும் பொலிந்து விளங்கும் தடாகங்கள் நிறைந்த வளப்பம் பொருந்திய சிவ கிரியாகிய பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 150 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தம், தனதன, டிண், டுண், செய்து, அருளிய, கொண்டு, செய்யும், பெறவும், உனது, வந்து, நான், உடைய, செய்த, தொம்தம், சஞ்சம், வந்த, உள்ள, திருமாலின், எங்கே, டிண்டிண், கஞ்சஞ், தஞ்சந், டுண்டுண், வஞ்சன், கடியவர், றென்றுந், தந்தொந், தங்கும், விளங்கும், கொண்ட, வரும்படி, பொருந்திய, அழகு, சங்கம், பெருமாளே, கூறி