பாடல் 143 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனனா தனந்தனத் தனனா தனந்தனத் தனனா தனந்தனத் ...... தனதான |
கனமா யெழுந்துவெற் பெனவே யுயர்ந்துகற் புரமா ரணந்துளுத் ...... திடுமானார் கனிவா யுகந்துசிக் கெனவே யணைந்துகைப் பொருளே யிழந்துவிட் ...... டயர்வாயே மனமே தளர்ந்துவிக் கலுமே யெழுந்துமட் டறவே யுலந்துசுக் ...... கதுபோலே வசமே யழிந்துவுக் கிடுநோய் துறந்துவைப் பெனவே நினைந்துனைப் ...... புகழ்வேனோ புனவே டர்தந்தபொற் குறமா துஇன்புறப் புணர்கா தல்கொண்டஅக் ...... கிழவோனே புனலே ழுமங்கவெற் பொடுசூர் சிரங்கள்பொட் டெழவே லெறிந்தவுக் ...... கிரவீரா தினமே வுகுங்குமப் புயவா சகிண்கிணிச் சிறுகீ தசெம்பதத் ...... தருளாளா சிவலோ கசங்கரிக் கிறைபால பைங்கயத் திருவா வினன்குடிப் ...... பெருமாளே. |
பாரத்துடன் எழுந்து மலை போல் உயர்ந்து, கற்பூரம் முதலியன பூசப்பட்டு, மரணத்தைத் தரவல்ல (மந்திர வித்தை கொண்டது போல) செழிப்புடன் வளர்ந்த மார்பகங்கள் கொண்ட விலைமாதர்களின் கொவ்வைக் கனி போன்ற செவ்வாயை விரும்பி, விடாது உறுதியாகத் தழுவி, கைப் பொருள் எல்லாவற்றையும் இழந்து விட்டு, தளர்ச்சியுற்று மனம் தளர்ந்து, விக்கல் எடுத்து, அளவின்றி உடல் அழிவுற்று சுக்கு போலாகி உலர்ந்து, தன் வசம் அழிந்து ஒடுக்குகின்ற நோயை அகற்றி, சேமநிதி (நீயே) என்று கருதி உன்னைப் புகழ மாட்டேனோ? தினைப் புன வேடர்கள் பெற்ற அழகிய குற மகளாகிய வள்ளி இன்பம் கொள்ளும்படி, அவளைச் சேர்வதற்குக் காதல் கொண்ட அந்தக் கிழ வேடம் பூண்டவனே, ஏழு கடல்களும் வற்றும்படி, ஏழு மலைகளோடு, சூரனுடைய தலைகள் பொடிபடுமாறு வேலாயுதத்தைச் செலுத்திய பெருங் கோப வீரனே, நாள் தோறும் விரும்பக் கூடிய குங்குமப்பூ முதலிய வாசனைகள் பூசப்பட்ட தோள்களில் மணம் நிறைந்தவனே, கிண்கிணிகளின் மெல்லிய இசையுடன் கூடிய செவ்விய திருவடிகளை உடைய அருளாளனே, சிவலோகத்தில் உள்ள சங்கரிக்குத் தலைவனான சிவபெருமானுடைய பிள்ளையே, பசுமையான நீர் நிலைகளையுடைய பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 143 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனா, தனந்தனத், கூடிய, கொண்ட, பெனவே, பெருமாளே