பாடல் 144 - பழநி - திருப்புகழ்

ராகம் - ...; தாளம் -
தான தந்ததனத் தான தந்ததனத் தான தந்ததனத் ...... தனதான |
கார ணிந்தவரைப் பார டர்ந்துவினைக் காதல் நெஞ்சயரத் ...... தடுமாறிக் கான ரம்புதிரத் தோல்வ ழும்புறுபொய்க் காய மொன்றுபொறுத் ...... தடியேனும் தாரி ணங்குகுழற் கூர ணிந்தவிழிச் சாப மொன்றுநுதற் ...... கொடியார்தம் தாள்ப ணிந்தவர்பொற் றோள்வி ரும்பிமிகத் தாழ்வ டைந்துலையத் ...... தகுமோதான் சூர னங்கம்விழத் தேவர் நின்றுதொழத் தோய முஞ்சுவறப் ...... பொரும்வேலா தூய்மை கொண்டகுறத் தோகை நின்றபுனச் சூழ்பெ ருங்கிரியிற் ...... றிரிவோனே ஆர ணன்கருடக் கேத னன்தொழமுற் றால முண்டவருக் ...... குரியோனே ஆலை யும்பழனச் சோலை யும்புடைசுற் றாவி னன்குடியிற் ...... பெருமாளே. |
மேகங்களை அணிந்த மலைகளுடன் கூடிய இப் பூமியில் பிறந்து, வினைகளைப் பெருக்கும் காதலினால் உள்ளம் சோர்ந்து, தடுமாற்றம் கொண்டு, வாயு, நரம்பு, இரத்தம், தோல், கொழுப்பு இவைகளோடு கூடிய பொய்யான உடல் ஒன்றினைச் சுமந்து அடியேனாகிய நான், மாலை சேர்ந்த கூந்தலையும், கூர்மையான கண்களையும், வில்லுக்கு ஒப்பான நெற்றியையும் உடைய கொடி போன்ற பொதுமகளிருடைய பாதங்களை வணங்கி, அவர்களுடைய அழகிய தோள்களின் மேல் ஆசைப்பட்டு, மிகவும் கீழான நிலையை அடைந்து, அழிந்து போகத் தக்கதாமோ? சூரனுடைய உடல் அழிந்து போக, தேவர்கள் நின்று போற்ற, கடலும் வற்றிப்போக, சண்டை செய்யும் வேலனே, பரிசுத்தம் கொண்ட மயில் போன்ற வள்ளி நின்ற, தினைப் புனங்கள் சூழ்ந்த வள்ளிமலையில் திரிகின்றவனே, பிரமன், கருடக் கொடியையுடைய திருமால் இருவரும் வணங்க, ஆலகால விஷம் முழுவதையும் உண்ட சிவபெருமானுக்கு உரியவனே, கரும்பு ஆலைகளும், வயல்களும், சோலைகளும் பக்கங்களில் சூழ்ந்துள்ள திருவாவினன்குடியில் (பழநியில்) வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 144 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்ததனத், அழிந்து, உடல், கூடிய, பெருமாளே