பாடல் 1269 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
தன்யாஸி
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தாளம் - அங்கதாளம் - 5 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனதன தனான தான தனதன தனான தான தனதன தனான தான ...... தனதான |
மதிதனை யிலாத பாவி குருநெற யிலாத கோபி மனநிலை நிலாத பேயன் ...... அவமாயை வகையது விடாத பேடி தவநினை விலாத மோடி வரும்வகை யிதேது காய ...... மெனநாடும் விதியிலி பொலாத லோபி சபைதனில் வராத கோழை வினையிகல் விடாத கூள ...... னெனைநீயும் மிகுபர மதான ஞான நெறிதனை விசார மாக மிகுமுன துரூப தான ...... மருள்வாயே எதிர்வரு முதார சூர னிருபிள வதாக வேலை யியலொடு கடாவு தீர ...... குமரேசா இனியசொல் மறாத சீலர் கருவழி வராமல் நாளும் இளமையது தானு மாக ...... நினைவோனே நதியுட னராவு பூணு பரமர்குரு நாத னான நடைபெறு கடூர மான ...... மயில்வீரா நகைமுக விநோத ஞான குறமினுட னேகு லாவு நவமணி யுலாவு மார்ப ...... பெருமாளே. |
அறிவு என்பதே இல்லாத பாவி, குரு சொன்ன வழியில் நிற்காத சினமுள்ளவன், மனம் ஒரு நிலையில் நிற்காத பேய் போன்று அலைபவன், பயனற்ற மாயையின் பொய்யான போக்குக்களை விடாத பேடி, தவம் என்ற நினைப்பே இல்லாத முரடன், இந்த உடம்பு எப்படிப் பிறந்தது என்று ஆராயும் பாக்கியம் இல்லாதவன், மிகக் கொடிய கஞ்சன், சபைகளில் வந்து பேசும் ¨தரியம் இல்லாதவன், தீவினையின் வலிமையை நீக்கமாட்டாத பயனற்றவன் ஆகிய என்னை நீயும் மிக மேலான ஞானமார்க்கத்தை ஆராய்ச்சி செய்ய மிக்கு விளங்கும் உன்னுடைய சாரூபம் (வடிவ தரிசனம்) என்ற பரிசை அடியேனுக்குத் தந்தருள்க. எதிர்த்து வந்த மிக்க வலிய சூரன் இரண்டு பிளவாகும்படியாக வேலாயுதத்தை தக்க முறையில் செலுத்தின தீரனே, குமரேசனே, இனிய சொற்களையே மறக்காமல் பேசும் பெரியோர்கள் மீண்டும் கருவழியடைந்து பிறவாதபடியும், எப்போதும் இளமையுடன் விளங்கும்படியும், நினைத்து அருள் செய்பவனே, கங்கைநதியுடன், பாம்பையும் அணிந்த பரமேசுரர் சிவபெருமானுக்கு குருமூர்த்தியானவனே, நடையிலேயே கடுமையான வேகம் காட்டும் மயிலையுடைய வீரனே, சிரித்த முகத்தாளும், அற்புத ஞானத்தைக் கொண்டவளுமான குறப் பெண் வள்ளியுடன் கொஞ்சுகின்றவனே, நவரத்தின மாலை விளங்கும் மார்பை உடைய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1269 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - விடாத, தனான, தனதன, இல்லாதவன், நிற்காத, விளங்கும், இல்லாத, பேசும், பேடி, யிலாத, பாவி, தகிட, பெருமாளே