பாடல் 1255 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
மோஹனம்
தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகதிமி-2, தகிட-1 1/2
தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகதிமி-2, தகிட-1 1/2
தானன தனன தானன தனன தானன தனன ...... தனதான |
தோரண கனக வாசலில் முழவு தோல்முர சதிர ...... முதிராத தோகையர் கவரி வீசவ யிரியர் தோள்வலி புகழ ...... மதகோப வாரண ரதப தாகினி துரக மாதிர நிறைய ...... அரசாகி வாழினும் வறுமை கூரினு நினது வார்கழ லொழிய ...... மொழியேனே பூரண புவன காரண சவரி பூதர புளக ...... தனபார பூஷண நிருதர் தூஷண விபுதர் பூபதி நகரி ...... குடியேற ஆரண வனச ஈரிரு குடுமி ஆரியன் வெருவ ...... மயிலேறு மாரிய பரம ஞானமு மழகு மாண்மையு முடைய ...... பெருமாளே. |
தோரணங்கள் கட்டிய அழகிய அரண்மனை வாசலில், முழவு, தோல் முரசு முதலிய வாத்தியம் ஒலிக்க, இளம்பருவப் பெண்கள் சாமரம் வீச, புகழ்ந்து பாடும் பாடகர்கள் என் புஜ பராக்ரமத்தைப் புகழ, மதமும் கோபமும் கொண்ட யானைகள், தேர்கள், காலாட்படைகள், குதிரைகள் திசை நிரம்பி விளங்க, நான் ஓர் அரசனாகி வாழ்ந்தாலும் சரி, வறுமை நிலை மிகுந்து பாடுபட்டாலும் சரி, உனது திவ்யமான திருவடிகளைத் தவிர வேறு எதையும், வேறு யாரையும் புகழ மாட்டேன். முழு முதற் கடவுளே, உலகங்களுக்கு மூலாதார மூர்த்தியே, குறப்பெண் வள்ளியின் மலையைப் போன்ற பெரிய இனிய மார்பகங்களை அணிந்த மார்பனே, அசுரர்களை நிந்தித்துக் கண்டிப்பவனே, தேவர்களின் தலைவனான இந்திரன் அமரலோகத்தில் மீண்டும் குடியேறும்படியும், வேதம் ஓதுபவனும், தாமரையில் அமர்ந்தவனும், நான்கு குடுமிகளை உடையவனும் ஆகிய பெரியோனாம் பிரமன் அச்சம் கொள்ளும்படியாகவும், மயில் மீது ஏறிவரும் பெரியவனே, மேலான ஞானத்தையும், அழகையும், பராக்ரமத்தையும் உடைய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1255 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, புகழ, வேறு, பெருமாளே, வறுமை, வாசலில், முழவு