பாடல் 1248 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனதன தாத்தனத் தனதன தாத்தனத் தனதன தாத்தனத் ...... தனதான |
திதலையு லாத்துபொற் களபம்வி டாப்புதுத் த்ரிவிதக டாக்களிற் ...... றுரகோடு சிகரம காப்ரபைக் குவடென வாய்த்துநற் சுரர்குடி யேற்றிவிட் ...... டிளநீரை மதனவி டாய்த்தனத் திளைஞரை வாட்டுசெப் பிணைமுலை மாத்தவக் ...... கொடிபோல்வார் வலையிலி ராப்பகற் பொழுதுகள் போக்குமற் றெனையுனை வாழ்த்தவைத் ...... தருள்வாயே சததள பார்த்திபற் கரிபுரு ஷோத்தமற் கெரிகன லேற்றவற் ...... குணராதோர் சகலச மார்த்தசத் தியவன சூக்ஷமுக் கியபர மார்த்தமுற் ...... புகல்வோனே கதிர்மணி நீர்க்கடற் சுழிபுகு ராக்ஷதக் கலகப ராக்ரமக் ...... கதிர்வேலா கருதிய பாட்டினிற் றலைதெரி மாக்ஷணக் கவிஞரு சாத்துணைப் ...... பெருமாளே. |
தேமல் பரவி உள்ளதும், அழகிய கலவைச் சாந்தை விடாததாய், புதிதாய் (கன்னமதம், கைமதம், கோசமதம் என்னும்) மூன்று விதமான மத நீர்களைக் கொண்ட யானையின் பலமான தந்தம் என்றும், சிகரங்களைக் கொண்டு மிக்க பொலிவு உடைய மலையை ஒக்கும் என்று சொல்லும்படி அமைந்து, தேவர்கள் பருகுவதான அமுதத்தை நிரம்பக் கொண்டதாய், இள நீரைப் போன்றதாய், காம இச்சை என்னும் தாகத்துக்கு ஏற்றதாய், செல்வமுடைய இளைஞர்களை வாட்டும் தன்மை உடையதாய், செப்புக் குடம் போன்றதான இரு மார்பகங்களைக் கொண்டு சிறந்த தோற்றம் உடையவர்களாய், கொடி போன்ற சாயலை உடைய விலைமாதர்களின் வலையில் இரவிலும் பகலிலும் காலம் கழித்தலை நீக்கி, என்னை உன் புகழை வாழ்த்தும்படியாக செய்து அருள் புரிவாயாக. நூறு இதழ்களை உடைய தாமரையில் இருக்கும் அரசரான பிரமனுக்கும், திருமாலாகிய புருஷ உத்தமருக்கும், நெருப்பைக் கையில் ஏந்திய சிவபெருமானுக்கும் அறிய முடியாததான, ஒப்பற்றதும், எல்லாவிதமானதும், ஒத்த பொருளானதும், உண்மை நிறைந்ததும், அழகுள்ளதும், நுட்பமானதும், முக்கியமானதுமான மேலான உண்மைப் பொருளை முன்பு உபதேசித்தவனே, ஒளி பொருந்தியதும், முத்தும் பவளமும் உடையதுமான தன்மையை உடைய கடலின் நீர்ச் சுழியில் புகுந்திருந்த அரக்கர்களுடன் போர் புரிந்த வல்லமை உடைய கதிர் வேலனே, உன்னை நினைத்துப் பாடப்பட்ட பாடலிடத்து நீ அமர்ந்திருத்தலை தெரிந்துள்ளவர்களும், நொடியில் கவி பாட வல்லவர்களுமான பெரியோர்களின் ஆராய்ச்சிக்குத் துணை புரியும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1248 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உடைய, தனதன, தாத்தனத், கொண்டு, பெருமாளே, என்னும்