பாடல் 1226 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனதனந் தனதனன தனதனந் தனதனன தனதனந் தனதனன ...... தனதான |
கடலினும் பெரியவிழி மலையினும் பெரியமுலை கவரினுந் துவரதர ...... மிருதோள்பைங் கழையினுங் குழையுமென மொழிபழங் கிளவிபல களவுகொண் டொருவர்மிசை ...... கவிபாடி அடலசஞ் சலனதுல னநுபமன் குணதரன்மெய் அருள்பரங் குரனபய ...... னெனஆசித் தலமரும் பிறவியினி யலமலம் பிறவியற அருணபங் கயசரண ...... மருள்வாயே வடநெடுங் குலரசத கிரியினின் றிருகலுழி மகிதலம் புகவழியு ...... மதுபோல மதசலஞ் சலசலென முதுசலஞ் சலதிநதி வழிவிடும் படிபெருகு ...... முதுபாகை உடையசங் க்ரமகவள தவளசிந் துரதிலக னுலகுமிந் திரனுநிலை ...... பெறவேல்கொண் டுததிவெந் தபயமிட மலையொடுங் கொலையவுண ருடனுடன் றமர்பொருத ...... பெருமாளே. |
கடலைக் காட்டிலும் பெரிதான கண்கள், மலையைக் காட்டிலும் பெரிதான மார்பகம், பின்னும் நுகர்தலுக்குரிய பவளம் போன்ற உதடுகள், இரண்டு தோள்களும் பசுமை வாய்ந்த மூங்கிலைக் காட்டிலும் குழைந்து நிற்பவை என்று விலைமாதர்களைப் புகழ்வதற்கு (பணம் தேடுவதற்காக) பழைய நூல்களிலிருந்து திருடி (பொருட் செல்வம் உடைய) ஒருவர் மீது கவிகளைப் புனைந்து கவி பாடி, (நீ) வலிமை பொருந்தியவன், கவலை அற்றவன், நிகரில்லாதவன், உவமை கூற முடியாதவன், நற் குணங்கள் உடையவன், உண்மைப் பொருளை அருள வல்ல மேன்மையான தோற்றம் உடையவன், அடைக்கலம் தர வல்லவன் என்றெல்லாம் விரும்பிப் புகழ்ந்து பாடி, மனம் கலங்கி வருந்தும் இப்பிறப்பு இனிப் போதும் போதும். (ஆதலால்) பிறவி என்பது ஒழிவதற்காக, சிவந்த தாமரை போன்ற உன் பாதங்களை எனக்கு அருள் செய்வாயாக. வடக்கே உள்ள பெரிய சிறந்த வெள்ளி மலையிலிருந்து இரு காட்டாறுகள் பூமியில் புக வழிந்து வருவது போல, (இரு கண்களிலிருந்தும்) மத நீர் சல சல என்ற ஒலியுடன், பழமையான நீர் நிறைந்த கடலும் ஆறும் வழி விடும்படியாகப் பெருகுவதும், யானைப் பாகனாக இந்திரனை உடையதும், ஊண் உண்டைகள் உண்பதும், வெண்மை நிறமானதுமான யானை ஐராவதத்தைக் கொண்ட சிறந்தவனான இந்திரனுடைய பொன்னுலகமும், அந்த இந்திரனும் நிலை பெற்று உய்ய, வேலாயுதத்தால் கடல் வற்றி ஓலமிட, கிரெளஞ்ச மலையுடனும், கொலைத் தொழிலைப் பூண்ட அசுரர்களுடனும் மாறுபட்டுச் சண்டை செய்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1226 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - காட்டிலும், தனதனன, தனதனந், போதும், நீர், உடையவன், பெரிதான, பெருமாளே, பாடி