பாடல் 1222 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
ஹம்ஸாநந்தி
தாளம் - அங்கதாளம் - 18 1/2
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2
தகிட-1 1/2, தகதிமி-2
தாளம் - அங்கதாளம் - 18 1/2
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2
தகிட-1 1/2, தகதிமி-2
தனதனன தனதனன தனதனன தனதனன தத்தத்த தத்தான ...... தந்ததான |
எதிரொருவ ரிலையுலகி லெனஅலகு சிலுகுவிரு திட்டுக்ரி யைக்கேயெ ...... ழுந்துபாரின் இடையுழல்வ சுழலுவன சமயவித சகலகலை யெட்டெட்டு மெட்டாத ...... மந்த்ரவாளால் விதிவழியி னுயிர்கவர வருகொடிய யமபடரை வெட்டித் துணித்தாண்மை ...... கொண்டுநீபம் விளவினிள இலைதளவு குவளைகமழ் பவளநிற வெட்சித் திருத்தாள்வ ...... ணங்குவேனோ திதிபுதல்வ ரொடுபொருது குருதிநதி முழுகியொளிர் செக்கச் செவத்தேறு ...... செங்கைவேலா சிகரகிரி தகரவிடு முருவமர கதகலப சித்ரக் ககத்தேறு ...... மெம்பிரானே முதியபதி னொருவிடையர் முடுகுவன பரிககன முட்டச் செலுத்தாறி ...... ரண்டுதேரர் மொழியுமிரு அசுவினிக ளிருசதுவி தவசுவெனு முப்பத்து முத்தேவர் ...... தம்பிரானே. |
எமக்கு எதிரானவர் எவரும் இல்லை உலகத்திலேயே என்று கூர்மையான வாதப்போருக்கு கொடிகட்டி, அத்தகைய செய்கைக்கே துணிந்து எழுந்து, இப்பூமியின் இடையில் அலைந்து திரியும் எல்லாவிதமான சமயவாதிகளாலும், எல்லாவகையான அறுபத்து நான்கு கலைகளாலும் எட்ட முடியாத சாந்தியான தனி ஞான வாள் கொண்டு, பிரமன் விதித்த விதிப்படி உயிரைக் கவர்ந்து செல்ல வரும் கொடிய யமதூதர்களை வெட்டித் துணித்து, என் ஆண்மை வைராக்கியத்தை நிலை நிறுத்தி, கடப்பமலர், விளாவின் இளம் தளிர், முல்லை, கருங்குவளை இவற்றின் மணம் கமழும் பவள நிறமுள்ள, சிவந்த வெட்சியை அணிந்துள்ள திருவடிகளை வணங்குவேனோ? திதியின் புதல்வர்களாகிய அசுரர்களுடன் போர் செய்து, ரத்த ஆற்றில் மூழ்கி, ஒளிரும் செக்கச் செவேல் என்னும் மிகுந்த செந்நிறம் கூடிய வேலை உன் செங்கரத்தில் ஏந்தியவனே, சிகரங்களை உடைய கிரெளஞ்சகிரியைப் பொடிபடச் செய்த உருவத்தோனே, மரகதப் பச்சைநிறத் தோகையையும் அழகையும் உடைய பட்சியாம் மயில் மீது ஏறும் பெருமானே, பழைய பதினொரு ருத்திரர்களும், விரைவாக ஓடக்கூடிய குதிரைகளை ஆகாயத்தில் நன்கு செலுத்துகின்ற பன்னிரு தேர்களை உடைய பன்னிரண்டு சூரியர்களும், மருத்துவ நூல்களைச் சொல்லிய இரண்டு அசுவினி தேவர்களும், எட்டு வித வசுக்களும் ஆகிய முப்பத்து மூன்று (11+12+2+8= 33) தேவர்களின் தம்பிரானே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1222 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தகதகிட, தனதனன, உடைய, தம்பிரானே, செக்கச், வெட்டித், முப்பத்து