பாடல் 1219 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
ஸிந்துபைரவி
தாளம் - அங்கதாளம் - 5
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தாளம் - அங்கதாளம் - 5
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தனனா தனத்ததன தனனா தனத்ததன தனனா தனத்ததன ...... தனதான |
இருநோய்ம லத்தைசிவ வொளியால்மி ரட்டியெனை யினிதாவ ழைத்தெனது ...... முடிமேலே இணைதாள ளித்துனது மயில்மேலி ருத்தியொளி ரியல்வேல ளித்துமகி ...... ழிருவோரும் ஒருவாகெ னக்கயிலை யிறையோன ளித்தருளு மொளிர்வேத கற்பகந ...... லிளையோனே ஒளிர்மாம றைத்தொகுதி சுரர்பார்து தித்தருள உபதேசி கப்பதமு ...... மருள்வாயே கருநோய றுத்தெனது மிடிதூள்ப டுத்திவிடு கரிமாமு கக்கடவு ...... ளடியார்கள் கருதாவ கைக்குவர மருள்ஞான தொப்பைமகிழ் கருணாக டப்பமல ...... ரணிவோனே திருமால ளித்தருளு மொருஞான பத்தினியை திகழ்மார்பு றத்தழுவு ...... மயில்வேலா சிலைதூளெ ழுப்பிகவ டவுணோரை வெட்டிசுரர் சிறைமீள விட்டபுகழ் ...... பெருமாளே. |
பிறப்பு, இறப்பு என்ற இரு பெரு நோயையும், ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலத்தையும், சிவ தேஜஸ் கொண்டு விரட்டி ஓட்டி, என்னை இனிமையாக அழைத்து என் சிரசின் மீது உன் இரு திருவடிகளைச் சூட்டி, உனது மயிலின் மீது என்னையும் இருக்கச் செய்து, ஒளி வீசி விளங்கும் வேலினை என் கையில் அளித்து நான் மகிழும்படியாக, நாம் இருவரும் (வேறாக இன்றி) ஒன்று படுவோமாக என்று, கயிலாச நாதன் சிவபிரான் பெற்று அருளிய விளங்கும் வேத நாயகன் கற்பக விநாயக மூர்த்திக்கு நல்ல தம்பியே, தேவர்களும் பூவுலகில் உள்ளவர்களும் போற்றும்படியாக, பிரகாசமான சிறந்த வேதப்பகுதிகளையும், உபதேச மொழிகளையும் எனக்குக் கற்பித்து அருள்வாயாக. மீண்டும் கருவிற் சேரும் பிறவி நோயை ஒழித்து, எனது தரித்திரத்தையும் தூளாக்கி அழித்துவிடக்கூடிய யானையின் சிறந்த முகத்தை உடைய கடவுள், அடியார்கள் நினைத்திராத வகைக்கு வரங்களை அள்ளித் தந்தருளும் ஞானமூர்த்தியாம் தொந்திக் கணபதி உன்னிடம் மகிழ்ச்சி அடைகின்ற கருணாமூர்த்தியே, கடப்பமலர் மாலையை அணிகின்றவனே, திருமால் பெற்றருளிய ஒப்பற்ற ஞான பத்தினியாகிய வள்ளியை, விளங்கும் மார்பில் பொருந்த அணைத்த கூர் வேலனே, கிரெளஞ்ச மலையைத் தூளாக்கி, கபட வஞ்சனை உள்ள அசுரர்களை வெட்டிச் சாய்த்து, தேவர்களைச் சிறைமீட்ட பெருமையுடைய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1219 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - விளங்கும், தனத்ததன, தனனா, சிறந்த, தூளாக்கி, பெருமாளே, ளித்தருளு, தகிட, மீது