பாடல் 1214 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தான தான தனத்தன தான தான தனத்தன தான தான தனத்தன ...... தனதான |
ஆசை நேச மயக்கிகள் காசு தேடு மனத்திகள் ஆவி சோர வுருக்கிகள் ...... தெருமீதே யாவ ரோடு நகைப்பவர் வேறு கூறு விளைப்பவர் ஆல கால விழிச்சிகள் ...... மலைபோலு மாசி லாத தனத்தியர் ஆடை சோர நடப்பவர் வாரி யோதி முடிப்பவர் ...... ஒழியாமல் வாயி லூற லளிப்பவர் நாளு நாளு மினுக்கிகள் வாசல் தேடி நடப்பது ...... தவிர்வேனோ ஓசை யான திரைக்கடல் ஏழு ஞால முமுற்றருள் ஈச ரோடு றவுற்றவள் ...... உமையாயி யோகி ஞானி பரப்ரமி நீலி நார ணியுத்தமி ஓல மான மறைச்சிசொல் ...... அபிராமி ஏசி லாத மலைக்கொடி தாய்ம னோம ணிசற்குணி ஈறி லாத மலைக்கொடி ...... அருள்பாலா ஏறு மேனி யொருத்தனும் வேத னான சமர்த்தனும் ஈச னோடு ப்ரியப்படு ...... பெருமாளே. |
ஆசையும் அன்பும் காட்டி மயக்குபவர்கள், பொருள் தேடுவதிலேயே மனத்தைச் செலுத்துபவர்கள், உயிர் சோர்ந்து போகும்படி உள்ளத்தை உருக்குபவர்கள், தெருவில் போகும் எல்லோருடனும் சிரிப்பவர்கள், குணம் வேறுபடும் தன்மையை உண்டு பண்ணுபவர்கள், ஆலகால விஷத்தைப் போல கண்களை உடையவர்கள், மலையைப் போன்று பருத்த, மறு இல்லாததான மார்பை உடையவர்கள், ஆடை நெகிழும்படி நடப்பவர்கள், கூந்தலை வாரி முடிப்பவர்கள், இடைவிடாது, வாயில் அதர பானம் தருபவர்கள், நாள் தோறும் தங்களை அழகுபடுத்திக் கொள்ளுபவர்கள் (ஆகிய விலைமாதர்களின்) வீட்டு வாயிலைத் தேடி நடக்கும் வழக்கத்தை விடமாட்டேனோ? ஒலி செய்யும் அலை வீசும் ஏழு கடல்களிலும், பூமியிலும் ஒன்றி இருந்து அருள்செய்யும் சிவபெருமானுடன் இணைந்து இருப்பவள், உமை அம்மை, யோகத்திலிருப்பவள், ஞானி, முழுமுதல் தேவி, நீல நிறத்தி, துர்க்கை, உத்தமி, இசை ஒலியுடன் ஓதப்படுகின்ற வேதத்தினள், புகழ் கொண்ட அழகி, இகழ்ச்சி என்பதே இல்லாத தூயவள், கொடி போன்ற இடுப்பை உடையவள், தாய், மனத்தை ஞான நிலைக்கு எழுப்புபவள், நற் குணத்தை உடையவள், முடிவில்லாதவள், ஹிமவான் என்னும் மலையரசன் பெற்ற கொடியாகிய பார்வதி தேவி பெற்றருளிய பிள்ளையே, வராகத்தின் உருவை எடுத்த திருமாலும், வேதத்தில் வல்லவனான பிரமனும், சிவபெருமானும் மிக விரும்பும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1214 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தன, பெருமாளே, உடையவர்கள், தேவி, உடையவள், மலைக்கொடி, ஞானி, ரோடு, வாரி, நாளு, தேடி