பாடல் 1208 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனந்த தாத்தனத் தனந்த தாத்தனத் தனந்த தாத்தனத் ...... தனதான |
அரும்பி னாற்றனிக் கரும்பி னாற்றொடுத் தடர்ந்து மேற்றெறித் ...... தமராடும் அநங்க னார்க்கிளைத் தயர்ந்த ணாப்பியெத் தரம்பை மார்க்கடைக் ...... கலமாகிக் குரும்பை போற்பணைத் தரும்பு றாக்கொதித் தெழுந்து கூற்றெனக் ...... கொலைசூழுங் குயங்கள் வேட்டறத் தியங்கு தூர்த்தனைக் குணங்க ளாக்கிநற் ...... கழல்சேராய் பொருந்தி டார்ப்புரத் திலங்கை தீப்படக் குரங்கி னாற்படைத் ...... தொருதேரிற் புகுந்து நூற்றுவர்க் கொழிந்து பார்த்தனுக் கிரங்கி யாற்புறத் ...... தலைமேவிப் பெருங்கு றோட்டைவிட் டுறங்கு காற்றெனப் பிறங்க வேத்தியக் ...... குறுமாசூர் பிறங்க லார்ப்பெழச் சலங்கள் கூப்பிடப் பிளந்த வேற்கரப் ...... பெருமாளே. |
அரும்பு கொண்ட மலர்ப் பாணங்களாலும், ஒப்பற்ற கரும்பு வில்லாலும் நெருங்கி மேலே படும்படிச் செலுத்திப் போர் செய்யும், மன்மதனுக்கு இளைப்புற்று, சோர்வு அடைந்து, ஏமாற்றி வஞ்சிக்கும் விலைமாதர்களுக்கு அடைக்கலப் பொருள் போல் அகப்பட்டு, (தென்னங்) குரும்பை போலப் பருத்து வெளித்தோன்றி கோபித்து எழுந்து, யமன் போலக் கொலைத் தொழிலை மேற்கொள்ளும் மார்பகங்களை விரும்பி மிகவும் சஞ்சலப்படும் காமுகனாகிய என்னை நற்குணங்களைக் கொண்டவனாகும்படிச் செய்து நல்ல திருவடியில் சேர்ப்பாயாக. பகைவர்களுடைய ஊராகிய இலங்கை தீப்பட்டு எரியும்படி குரங்கினால் (அநுமாரால்) செய்வித்து, ஒப்பற்ற தேரில் (கண்ணனாக) வீற்றிருந்து (துரியோதனனாதி) நூறு கெளரவர்களுக்கு விலகினவனாகி, அர்ச்சுனனிடம் இரக்கம் உற்றவனாகி, ஆலிலை மேல் கடலில் பள்ளி கொண்டு, (சூரன் ஒழிந்தான் என்ற நிம்மதியுடன்) பெரிய குறட்டை விட்டு, பெரு மூச்சுக் காற்றென (திருமால்) அறி துயிலில் விளங்கவே, கலக்கமுறும் மாமரமாகி நின்ற சூரனும், (அவனுக்கு அரணாயிருந்த) ஏழு மலைகளும் அஞ்சிக் கூச்சல் இட, கடல்கள் ஆரவாரிக்க, (அந்த மாமரத்தையும், மலைகளையும்) பிளந்தெறிந்த வேலாயுதத்தைக் கரத்தில் ஏந்திய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1208 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனந்த, தாத்தனத், ஒப்பற்ற, பெருமாளே, குரும்பை, பிறங்க