பாடல் 1209 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தனதன தத்தனாத் தனதன தத்தனாத் தனதன தத்தனாத் ...... தனதான |
அலமல மிப்புலாற் புலையுடல் கட்டனேற் கறுமுக நித்தர்போற் ...... றியநாதா அறிவிலி யிட்டுணாப் பொறியிலி சித்தமாய்த் தணிதரு முத்திவீட் ...... டணுகாதே பலபல புத்தியாய்க் கலவியி லெய்த்திடாப் பரிவொடு தத்தைமார்க் ...... கிதமாடும் பகடிது டுக்கன்வாய்க் கறையனெ னத்தராப் படியில்ம னித்தர்தூற் ...... றிடலாமோ குலகிரி பொற்றலாய்க் குரைகடல் வற்றலாய்க் கொடியஅ ரக்கரார்ப் ...... பெழவேதக் குயவனை நெற்றியேற் றவனெதிர் குட்டினாற் குடுமியை நெட்டைபோக் ...... கியவீரா கலைதலை கெட்டபாய்ச் சமணரை நட்டகூர்க் கழுநிரை முட்டஏற் ...... றியதாளக் கவிதையும் வெற்றிவேற் கரமுடன் வற்றிடாக் கருணையு மொப்பிலாப் ...... பெருமாளே. |
துன்பப் படுவதற்கென்றே பிறந்தவனாகிய எனக்கு, போதும் போதும், இந்த மாமிசப் பிண்டமாகிய இழிவான உடல், ஓ ஆறுமுக நாதனே, ஜீவன் முக்தர்கள் போற்றும் தலைவனே, அறிவல்லாதவன் நான், ஒருவருக்கு இட்ட பின் சாப்பிட வேண்டும் என்ற அறிவு இல்லாதவன், மனதை ஒடுக்கி அழகு நிறைந்த முக்தி வீட்டைச் சேராமல், பலப்பல வகையில் புத்தியைச் செலுத்தி, சிற்றின்பத்தில் களைத்து, காதலுடன் கிளி போன்ற பெண்களுக்கு இனிமைப் பேச்சுகளைப் பேசும் வெளி வேஷக்காரன், துடுக்கானவன், வாய் மாசு படிந்தவன் என்று பூமியில் உள்ள மனிதர்கள் என்னைக் குறை கூறிப் பழிக்க இடம் தரலாமோ? குலகிரிகளான ஏழு மலைகளும் கிரெளஞ்சமும் பாழ் இடமாய் அழிபட்டு, ஒலிக்கும் கடல் வற்றிப்போய், கொடுமை வாய்ந்த அரக்கர்களின் ஆரவாரம் கிளம்ப, வேதம் படைத்த பிரமனை, நெற்றியில் படும்படி அவனைக் குட்டிய குட்டால், அவனுடைய குடுமியையும் ஆணவத்தையும் ஒருங்கே சிதற அடித்த வீரனே, கலை ஞானம் அடியோடு கெட்டுப் போன, கோரைப்பாய் உடை உடுத்தியவர்களான சமணர்களை, நடப்பட்டிருந்த கூர்மையான கழு மரங்களில் வரிசையாக, ஒருவர் மீதம் இல்லாமல், ஏற்றின (திருஞானசம்பந்தராக வந்த பெருமாளே), தாளத்துடன் பாடும் பாடல்களும், வெற்றி வேல் ஏந்தும் திருக்கரமும், வற்றாத கருணையும் உள்ள இணை இல்லாத பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1209 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, பெருமாளே, தத்தனாத், உள்ள, போதும்