பாடல் 1190 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தன்னதன தத்த தத்த தன்னதன தத்த தத்த தன்னதன தத்த தத்த ...... தனதான |
மின்னினில்ந டுக்க முற்ற நுண்ணியநு சுப்பில் முத்த வெண்ணகையில் வட்ட மொத்து ...... அழகார விம்மியிள கிக்க தித்த கொம்மைமுலை யிற்கு னித்த வின்னுதலி லிட்ட பொட்டில் ...... விலைமாதர் கன்னல்மொழி யிற்சி றக்கு மன்னநடை யிற்க றுத்த கண்ணினிணை யிற்சி வத்த ...... கனிவாயிற் கண்ணழிவு வைத்த புத்தி ஷண்முகநி னைக்க வைத்த கன்மவச மெப்ப டிக்கு ...... மறவேனே அன்னநடை யைப்ப ழித்த மஞ்ஞைமலை யிற்கு றத்தி யம்மையட விப்பு னத்தில் ...... விளையாடும் அன்னையிறு கப்பி ணித்த பன்னிருதி ருப்பு யத்தில் அன்னியஅ ரக்க ரத்த ...... னையுமாளப் பொன்னுலகி னைப்பு ரக்கு மன்னநல்வ்ர தத்தை விட்ட புன்மையர்பு ரத்ர யத்தர் ...... பொடியாகப் பொன்மலைவ ளைத்தெ ரித்த கண்ணுதலி டத்தி லுற்ற புண்ணியவொ ருத்தி பெற்ற ...... பெருமாளே. |
மின்னலைப் போல் நடுங்குகின்ற மெலிந்த இடையிலும், முத்துப் போன்ற வெண்மை நிறம் கொண்ட பற்களிலும், வட்ட வடிவு கொண்டு அழகு நிரம்பி, பூரித்து, நெகிழ்ந்து, எழுந்து, திரண்ட மார்பகங்களிலும், வளைவு கொண்ட, வில்லைப் போன்ற நெற்றியில் அணிந்துள்ள பொட்டிலும், விலைமாதர்களுடைய கரும்பு போல் இனிக்கும் பேச்சிலும், சிறப்புற்ற அன்னத்தைப் போன்ற நடையிலும், கறுப்பு நிறம் கொண்ட இரு கண்களிலும், சிவந்த (கொவ்வைக்) கனி போன்ற வாயிலும், தனித்தனி தோய்ந்து வியப்புற்றுக் கிடந்த என் புத்தி மாறி, (உனது) ஆறு முகங்களையும் நினைக்குமாறு செய்த புண்ணியப் பயனை எந்தக் காரணத்தையும் கொண்டு மறக்க முடியுமா? அன்னத்தின் நடையைப் பழிக்க வல்ல மயிலைப் போன்றவள், மலையில் வளர்ந்த குறமங்கையாகிய தேவி, காட்டிலும் தினைப் புனத்திலும் விளையாடிய தாய் ஆகிய வள்ளி நாயகி, அழுத்தி அணைத்த பன்னிரண்டு திருப்புயங்களால் அயலாராய் மாறுபட்டிருந்த அசுரர்கள் அனைவர்களும் இறக்கும்படிச் செய்து, (தேவர்களின்) பொன்னுலகத்தைக் காத்தளித்த அரசே, நல்ல விரத அனுஷ்டானங்களைக் கைவிட்ட* இழி குணத்தோராய் முப்புரங்களில் வாழ்ந்திருந்த அசுரர்கள் பொடிபட்டு அழியும்படி மேருவை வில்லாக வளைத்து எரித்த நெற்றிக் கண்ணராகிய சிவபெருமானது இடது பாகத்தில் இருக்கும் ஒப்பற்ற புண்ணியவதியாகிய பார்வதி தேவி பெற்றெடுத்த பெருமாளே.
* திரிபுரத்தில் இருந்த அசுரர்கள் சிவ பூஜையை விட்டால் ஒழிய அவர்களை வெல்ல முடியாதென உணர்ந்த திருமால், புத்த ஆசாரியராகவும், நாரதர் அவர் மாணாக்கராகவும் சென்று, பலவித அற்புதங்களைக் காட்டி அசுரர்களை மயக்கிச் சிவ பூஜையைக் கை விடச் செய்தனர் - சிவபுராணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1190 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்த, தன்னதன, அசுரர்கள், கொண்ட, நிறம், தேவி, போல், கொண்டு, புத்தி, வட்ட, யிற்கு, யிற்சி, வைத்த, பெருமாளே