பாடல் 1191 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தத்தன தான தனத்தன தத்தன தான தனத்தன தத்தன தான தனத்தன ...... தனதான |
முத்தமு லாவு தனத்தியர் சித்தச னாணை செலுத்திகள் முத்தமி டாம னுருக்கிக ...... ளிளைஞோர்பால் முட்டவு லாவி மருட்டிகள் நெட்டிலை வேலின் விழிச்சியர் முப்பது கோடி மனத்திய ...... ரநுராகத் தத்தைக ளாசை விதத்தியர் கற்புர தோளின் மினுக்கிகள் தப்புறு மாற கமெத்திக ...... ளளவேநான் தட்டழி யாது திருப்புகழ் கற்கவு மோத வுமுத்தமிழ் தத்துவ ஞான மெனக்கருள் ...... புரிவாயே மத்தக யானை யுரித்தவர் பெற்றகு மார இலட்சுமி மைத்துன னாகி யவிக்ரமன் ...... மருகோனே வற்றிட வாரி திமுற்றிய வெற்றிகொள் சூரர் பதைப்புற வற்புறு வேலை விடுத்தரு ...... ளிளையோனே சித்திர மான குறத்தியை யுற்றொரு போது புனத்திடை சிக்கென வேத ழுவிப்புணர் ...... மணவாளா செச்சையு லாவு பதத்தின மெய்த்தவர் வாழ்வு பெறத்தரு சித்தவி சாக வியற்சுரர் ...... பெருமாளே. |
முத்து மாலை உலவுகின்ற மார்பினை உடையவர், மன்மதனின் கட்டளைகளை நடத்துபவர்கள், முத்தம் தந்து மனத்தை உருக்குபவர்கள், இளைஞோர்கள் இடத்தில் நன்றாகக் கலந்து (அவர்களை) மயங்கச் செய்பவர்கள், நீண்ட இலையை ஒத்த வேலை நிகர்க்கும் கண்களை உடையவர்கள், பல கோடிக் கணக்கான எண்ணங்களை உடையவர்கள், காமப் பற்றை விளைக்கும் கிளி போன்றவர்கள், ஆசைகளைக் காட்டுபவர்கள், பச்சைக் கற்பூரம் அளாவிய தோள்களோடு மினுக்குபவர்கள், தப்பான வழியில் செல்லும் மனத்துடன் வஞ்சிக்கும் வேசிகள் இடத்திலே நான் நிலை குலையாது, உனது திருப்புகழைக் கற்பதற்கும் எப்போதும் ஓதுவதற்கும் (இயல், இசை, நாடகம் ஆகிய) முத்தமிழ் தத்துவ ஞானத்தை எனக்கு அருள்வாயாக. கும்பத் தலத்தை உடைய (கயாசுரன் என்ற) யானையின் தோலை உரித்தவராகிய சிவபெருமான் அருளிய மகனே, லட்சுமிக்கு மைத்துன* முறையில் உள்ள வலிமையாளனான திருமாலுக்கு மருகனே, கடல் வற்றிப் போகவும், நிரம்ப வெற்றி மமதையுடன் விளங்கிய சூரர்கள் பதைக்கும்படியாகவும், வலிமை உடைய வேலாயுதத்தைச் செலுத்தி அருளிய இளையோனே, அழகிய குறப்பெண் வள்ளியை அடைந்து, ஒரு சமயத்தில் தினைப் புனத்தில் சிக்கெனத் தழுவிச் சேர்ந்த மணவாளனே, வெட்சி மலர் சூழும் பதத்தினனே, உண்மைத் தவசிகள் அழியாத இன்ப வாழ்க்கையைப் பெறுமாறு உதவுகின்ற சித்த மூர்த்தியே, விசாகனே, தகுதியுள்ள தேவர்களின் பெருமாளே.
* ஒரு சமயம் திருமாலும், அவரது அம்சமான உபேந்திரரும், லக்ஷ்மியும் உரையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த கண்வ முநிவரைக் கவனிக்காததால், முநிவர் கடுங்கோபம் அடைந்து அவர்களை முறையே சிவ முநிவராகவும், வேடர் மன்னனாகவும், மானாகவும் பிறக்க சபித்து விடுகிறார். அடுத்த பிறப்பில் சிவமுநிவரான திருமாலுக்கும், மானாகிய லக்ஷ்மிக்கும் பிறக்கும் வள்ளியை உபேந்திரனான வேடர் மன்னன் நம்பிராஜன் கண்டெடுத்து வளர்க்கிறான். வள்ளியின் வளர்ப்புத் தந்தை உபேந்திரன் திருமாலின் தம்பியானதால் லக்ஷ்மிக்கு மைத்துனன் முறை ஆகிறது. எனவே வள்ளியை மணந்த முருகன் லக்ஷ்மியின் மைத்துனனின் மருகன் என்று இங்கு குறிப்பிடுகிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1191 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தன, தனத்தன, வள்ளியை, அருளிய, அடைந்து, வேடர், உடைய, அவர்களை, லாவு, தத்துவ, வேலை, பெருமாளே, உடையவர்கள்