பாடல் 118 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான |
இருசெப் பெனவெற் பெனவட் டமுமொத் திளகிப் புளகித் ...... திடுமாதர் இடையைச் சுமையைப் பெறுதற் குறவுற் றிறுகக் குறுகிக் ...... குழல்சோரத் தருமெய்ச் சுவையுற் றிதழைப் பருகித் தழுவிக் கடிசுற் ...... றணைமீதே சருவிச் சருவிக் குனகித் தனகித் தவமற் றுழலக் ...... கடவேனோ அரிபுத் திரசித் தஜனுக் கருமைக் குரியத் திருமைத் ...... துனவேளே அடல்குக் குடநற் கொடிபெற் றெதிருற் றசுரக் கிளையைப் ...... பொருவோனே பரிவுற் றரனுக் கருணற் பொருளைப் பயனுற் றறியப் ...... பகர்வோனே பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப் பழநிக் குமரப் ...... பெருமாளே. |
இரண்டு செப்புக் குடங்கள் போலவும், மலை போலவும், வட்ட வடிவுடன் விளங்கி இளகிப் பூரிக்கும் பெண்களுடைய இடைக்கு அழகிய சுமையாக உள்ள மார்பகங்களைப் பெறும் பொருட்டு அவர்களுடன் நட்பு கொண்டு, நெருங்கி அணுகி, அவர்களுடைய கூந்தல் சோர்ந்து விழ, (அவர்கள்) தருகின்ற உடல் இன்பத்தை அடைந்து, வாயிதழ் ஊறலை உண்டு, (அவர்களைத்) தழுவி, வாசனை உலவுகின்ற படுக்கையின் மேலே, காம லீலைகளை இடைவிடாமல் செய்து, கொஞ்சிப் பேசி, உள்ளம் களித்து, தவ நிலையை விட்டு திரியக் கடவேனோ? திருமாலின் மகனான மன்மதனுக்கு அருமையான அழகிய மைத்துனனாகிய* தலைவனே, வெற்றி உள்ள சேவல் ஆகிய நல்ல கொடியை ஏந்தி, எதிர்த்து வந்த அசுரர்களுடைய கூட்டத்தைத் தாக்கியவனே, அன்பு பூண்டு சிவனுக்கு, அருள் பாலிக்கும் நல்ல பிரணவப் பொருளை அதன் பயனை உணர்த்தும் வகையில் உபதேசித்தவனே, வாயு மண்டலம் வரை நிறைந்திருக்கும் உயர்ந்த மெய்ம்மை விளங்கும் பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
* மன்மதன் திருமாலின் மகன். வள்ளி திருமாலின் மகள்.எனவே வள்ளிக் கணவன் முருகன் மன்மதனுக்கு மைத்துனன் ஆகிறான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 118 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனத், திருமாலின், மன்மதனுக்கு, நல்ல, உள்ள, அழகிய, கடவேனோ, பெருமாளே, போலவும்