பாடல் 1178 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனனத்த தனத்த தனத்தன தனனத்த தனத்த தனத்தன தனனத்த தனத்த தனத்தன ...... தனதான |
புருவத்தை நெறித்து விழிக்கயல் பயிலிட்டு வெருட்டி மதித்திரு புதுவட்டை மினுக்கி யளிக்குல ...... மிசைபாடும் புயல்சற்று விரித்து நிரைத்தொளி வளையிட்ட கரத்தை யசைத்தகில் புனைமெத்தை படுத்த பளிக்கறை ...... தனிலேறிச் சரசத்தை விளைத்து முலைக்கிரி புளகிக்க அணைத்து நகக்குறி தனைவைத்து முகத்தை முகத்துட ...... னுறமேவித் தணிவித்தி ரதத்த தரத்துமி ழமுதத்தை யளித்து வுருக்கிகள் தருபித்தை யகற்றி யுனைத்தொழ ...... முயல்வேனோ பரதத்தை யடக்கி நடிப்பவர் த்ரிபுரத்தை யெரிக்க நகைப்பவர் பரவைக்குள் விடத்தை மிடற்றிடு ...... பவர்தேர்கப் பரையுற்ற கரத்தர் மிகப்பகி ரதியுற்ற சிரத்தர் நிறத்துயர் பரவத்தர் பொருப்பி லிருப்பவ ...... ருமையாளர் சுரர்சுத்தர் மனத்துறை வித்தகர் பணிபத்தர் பவத்தை யறுப்பவர் சுடலைப்பொ டியைப்ப ரிசிப்பவர் ...... விடையேறுந் துணையொத்த பதத்த ரெதிர்த்திடு மதனைக்க டிமுத்தர் கருத்தமர் தொலைவற்ற க்ருபைக்கு ளுதித்தருள் ...... பெருமாளே. |
புருவத்தைச் சுருக்கி கயல் மீன் போன்ற கண்களால் அழைத்து விரட்டி, மதிக்கத்தக்க இரண்டு திரண்ட காதோலைகளை மினுக்கி, வண்டுகளின் கூட்டங்கள் இசை பாடுகின்ற மேகம் போன்ற கூந்தலைக் கொஞ்சம் விரித்து, வரிசையாக ஒளி வீசும் வளையல் இட்ட கைகளை ஆட்டி, அகிலின் நறு மணம் வீச அலங்கரிக்கப்பட்ட மெத்தைப் படுக்கை உள்ள பளிங்கு கற்களால் செய்யப்பட்ட அறையில் அமர்ந்து காம லீலைகளைச் செய்து, மலை போன்ற மார்பகங்கள் புளகாங்கிதம் கொள்ளும்படி அணைத்து, நகக்குறி இட்டு, முகத்தோடு முகம் வைத்து காம விரகத்தைத் தணித்து, சுவை நிரம்பிய வாயிதழ் ஊறலாகிய அமுதினை அளித்து மனதை உருக்கும் விலைமாதர்கள் தருகின்ற மதி மயக்கத்தை விட்டொழித்து உன்னைத் தொழ முயற்சி செய்ய மாட்டேனோ? தாம் ஆடுகின்ற கூத்தை அமைதியுடன் ஆடுபவர், மூன்று புரங்களையும் எரிந்து போகும்படி சிரித்தவர், கடலில் எழுந்த விஷத்தை தன் கழுத்தில் நிறுத்தியவர், (பலி பிச்சை) தேடும் கப்பரை (ஆகிய கபாலத்தை) ஏந்திய கையினர், சிறந்த கங்கை நதி தங்கும் சிரத்தை உடையவர், புகழ் மிக்கவர் எல்லாம் போற்றுகின்ற பெருமான், கயிலை மலையில் வீற்றிருப்பவர், உமையை ஒரு பாகத்தில் உடையவர், தேவர்கள் பரிசுத்தமானவர்கள் ஆகியோரின் மனத்தில் உறைகின்ற பேரறிவாளர், பணிகின்ற பக்தர்களுடைய பிறப்பை அறுப்பவர், சுடலை நீற்றைப் பூசியவர், (நந்தி என்னும்) ரிஷபத்தில் ஏறும், (அடியார்களுக்குத்) துணையாயிருக்கும் திருவடியை உடையவர், (பாணம் எய்த) மன்மதனைக் கடிந்தவர், இயன்பாகவே பாசங்களினின்று நீங்கியவர் (ஆகிய சிவபெருமானது) சித்தத்தில் அமர்ந்துள்ளவனே, அழிவில்லாத கருணையால தோன்றி அருளிய பெருமாளே.
பாடலின் பின்பகுதி முழுதும் சிவபெருமானின் சிறப்பைக் கூறுவது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1178 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனத்த, உடையவர், தனத்தன, தனத்த, ஆகிய, பெருமாளே, விரித்து, மினுக்கி, அணைத்து, நகக்குறி