பாடல் 1177 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் - மலய மாருதம்
தாளம் - அங்கதாளம் - 7 1/2
- எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தானன தந்தன தந்தன தனன தானன தந்தன தந்தன தனன தானன தந்தன தந்தன ...... தனதான |
புகரில் சேவல தந்துர சங்க்ரம நிருதர் கோபக்ர வுஞ்சநெ டுங்கிரி பொருத சேவக குன்றவர் பெண்கொடி ...... மணவாளா புனித பூசுர ருஞ்சுர ரும்பணி புயச பூதர என்றிரு கண்புனல் பொழிய மீமிசை யன்புது ளும்பிய ...... மனனாகி அகில பூதவு டம்புமு டம்பினில் மருவு மாருயி ருங்கர ணங்களு மவிழ யானுமி ழந்தஇ டந்தனி ...... லுணர்வாலே அகில வாதிக ளுஞ்சம யங்களும் அடைய ஆமென அன்றென நின்றதை யறிவி லேனறி யும்படி யின்றருள் ...... புரிவாயே மகர கேதன முந்திகழ் செந்தமிழ் மலய மாருத மும்பல வெம்பரி மளசி லீமுக மும்பல மஞ்சரி ...... வெறியாடும் மதுக ராரம்வி குஞ்சணி யுங்கர மதுர கார்முக மும்பொர வந்தெழு மதன ராஜனை வெந்துவி ழும்படி ...... முனிபால முகிழ்வி லோசன ரஞ்சிறு திங்களு முதுப கீரதி யும்புனை யுஞ்சடை முடியர் வேதமு நின்றும ணங்கமழ் ...... அபிராமி முகர நூபுர பங்கய சங்கரி கிரிகு மாரித்ரி யம்பகி தந்தருள் முருக னேசுர குஞ்சரி ரஞ்சித ...... பெருமாளே. |
குற்றமற்ற சேவற்கொடியை உடையவனே, உயர்ந்த பற்களுடையவர்களும், போரை விரும்பும் தன்மையும் உடைய அசுரர்கள் மீது கோபிக்கின்றவனே, நீண்ட மலையாகிய கிரெளஞ்சமலையைப் பிளந்த வீர மூர்த்தியே, வேடர் குலக்கொழுந்தாகிய வள்ளியின் கணவனே, தூய்மையான அந்தணரும், தேவர்களும் வணங்கும், மலைபோன்ற தோள்களை உடையவனே எனத் துதித்து, இரு கண்களிலிருந்தும் ஆனந்தக் கண்ணீர் சொரியவும், மேன்மேலும் அன்பு பெருகிய மனத்தனாகி எல்லா பூதங்களும் சேர்ந்த உடம்பும், உடம்பில் பொருந்திய அரிய உயிரும், மனம், புத்தி முதலிய கரணங்களும் கட்டு நீங்கவும், யான் என்ற நினைப்பும் விலகியபோது சிவ போதம் என்ற ஓர் உணர்வினாலே மாறுபட்ட எல்லா வாதிகளும்*, சமயங்களும் ஒதுங்கிப் போய்விடவும், உள்ளது என்றும், இல்லது என்றும் நின்ற உண்மைப் பொருளை அறிவில்லாத சிறிய அடியேன் அறியும்படியாக இன்றைய தினம் உபதேசித்து அருள் புரிவாயாக. மகர மீனக் கொடியைக் கொண்டு விளங்குவதும், செம்மையான தமிழ் முழங்குவதுமான சந்தன மலையாம் பொதிகையில் பிறந்த தென்றல் காற்றும், நானாவிதமான ஆசையைத் தூண்டும் மணமுள்ள மலர் அம்புகளும், பலவிதமான மலர்க் கொத்துக்களில் உள்ள மணத்தில் விளையாடும் வண்டுகளின் வரிசையாகிய நாணுடன், மேலான மலர் அலங்காரமும், கரத்திலே ஏந்திய இனிய கரும்பு வில்லும் கொண்டு காதல் போர் செய்ய எழுந்து வந்த மன்மத ராஜனை வெந்து சாம்பலாகும்படியாகக் கோபித்த நெற்றியில் குவிந்த கண்ணை உடையவரும், அழகிய இளம்பிறைச் சந்திரனையும், பழமையான கங்கா நதியையும் தரித்த ஜடாமுடியை உடையவருமாகிய சிவபெருமானும், வேதமும் நின்று தொழும்படியாக விளங்கி ஞான மணம் திகழும் அபிராமி அம்மையும், சங்குகளால் செய்த கொலுசுகளை அணிந்த திருவடித் தாமரையை உடைய சங்கரியும், ஹிமவானின் புத்திரியும், மூன்று கண்களை உடையவளுமான பார்வதியும் பெற்றருளிய முருகனே, தேவயானை விரும்புகின்ற பெருமாளே.
* வாதம் செய்கின்ற வாதிகள் பின்வருமாறு:தேக ஆத்மவாதி - உடம்புதான் ஆத்மா என வாதிப்பவன்,கரண ஆத்மவாதி - மனமும் புத்தியும்தான் ஆத்மா என வாதிப்பவன்,இந்திரிய ஆத்மவாதி - இந்திரியங்களே ஆத்மா என வாதிப்பவன்,ஏகாத்மவாதி - ஆத்மாவைத் தவிர வேறில்லை என வாதிப்பவன்,பிம்பப் ப்ரதிபிம்பவாதி - பிரமத்தின் நிழல்தான் உலகம் என வாதிப்பவன்,பரிணாமவாதி - பால் தயிராவது போல பிரமமே உலகானது என வாதிப்பவன்,விவர்த்தனவாதி - பிரமத்திலிருந்து தான் உலகம் வந்தது என வாதிப்பவன்,கணபங்கவாதி - கணந்தோறும் வேறுவேறு ஆத்மா உடம்பில் வருகிறது என வாதிப்பவன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1177 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வாதிப்பவன், தந்தன, ஆத்மா, தகதிமி, ஆத்மவாதி, தானன, என்றும், கொண்டு, மலர், உலகம், உடம்பில், உடைய, மும்பல, அகில, ராஜனை, அபிராமி, உடையவனே, பெருமாளே, எல்லா