பாடல் 1179 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
ஷண்முகப்ரியா
தாளம் - சருஸ்ர ரூபகம் - 6
தாளம் - சருஸ்ர ரூபகம் - 6
தனத்தந் தான தனதன தனத்தந் தான தனதன தனத்தந் தான தனதன ...... தனதான |
புவிக்குன் பாத மதைநினை பவர்க்குங் கால தரிசனை புலக்கண் கூடு மதுதனை ...... அறியாதே புரட்டும் பாத சமயிகள் நெறிக்கண் பூது படிறரை புழுக்கண் பாவ மதுகொளல் ...... பிழையாதே கவிக்கொண் டாடு புகழினை படிக்கும் பாடு திறமிலி களைக்கும் பாவ சுழல்படு ...... மடிநாயேன் கலக்குண் டாகு புவிதனி லெனக்குண் டாகு பணிவிடை கணக்குண் டாதல் திருவுள ...... மறியாதோ சிவத்தின் சாமி மயில்மிசை நடிக்குஞ் சாமி யெமதுளெ சிறக்குஞ் சாமி சொருபமி ...... தொளிகாணச் செழிக்குஞ் சாமி பிறவியை யொழிக்குஞ் சாமி பவமதை தெறிக்குஞ் சாமி முனிவர்க ...... ளிடமேவுந் தவத்தின் சாமி புரிபிழை பொறுக்குஞ் சாமி குடிநிலை தரிக்குஞ் சாமி யசுரர்கள் ...... பொடியாகச் சதைக்குஞ் சாமி யெமைபணி விதிக்குஞ் சாமி சரவண தகப்பன் சாமி யெனவரு ...... பெருமாளே. |
இந்தப் பூமியில் உன் திருவடிகளை நினைத்துத் தியானிப்பவர்களுக்கும், இறப்பு, நிகழ்வு, எதிர் என்ற முக்கால நிகழ்ச்சிகள் அவர்களின் அறிவுக் கண்ணில் புலப்படும். இந்த உண்மையை அறியாமலே, புரட்டிப் பேசும் பாபநெறிச் சமயவாதிகளின் வழியிலே நடக்கின்ற வஞ்சகப் பொய்யர்களை பாவத்திற்கு என்று ஏற்பட்ட, புழுக்கள் நிறைந்த, நரகம் ஏற்றுக்கொள்ளுதல் ஒருநாளும் தவறாது. பெரியோர்களின் பாடல்களில் போற்றப் பெறும் உனது புகழினை படிக்கும் திறமும், பாடும் திறமும் இல்லாதவன், இளைப்பை உண்டாக்கும் பாவச் சுழற்சியில் சிக்குண்டு சுழலும் நாயினும் கீழ்மகனான எனக்கு, மனக் கலக்கத்தைத் தரும் இப்புவியில் உள்ள எனக்கு, யான் செய்யுமாறு விதிக்கப்பட்ட தொண்டு இவ்வளவு என்று உள்ளதான ஒரு கணக்கு இருப்பது உன் உள்ளத்திற்கு தெரியாமலா போகும்? சிவபிரானிடத்தில் தோன்றிய சுவாமி, மயிலின் மீது நடனம் செய்யும் சுவாமி, எம்முடைய உள்ளத்திலே சிறப்பாக விளங்கும் சுவாமி, தனது திருவுருவத்தின் பேரொளியை அடியார்கள் காணுமாறு விளக்கமாகத் தோன்றும் சுவாமி, பிறவியை அடியோடு தொலைத்தருளும் சுவாமி, பாவங்களைப் போக்கி ஒழிக்கும் சுவாமி, முநிவர்கள் செய்யும் தவப்பொருளாக விளங்கும் சுவாமி, அடியார்கள் செய்யும் பிழைகளை எல்லாம் பொறுத்தருளும் சுவாமி, தேவர்களை விண்ணில் குடிபுகச் செய்து அங்கு நிலைபெற வைத்த சுவாமி, அசுரர்களைப் பொடியாகும்படி நெரித்து அழித்த சுவாமி, யாம் செய்ய வேண்டிய தொண்டு இன்னதென்று நிர்ணயிக்கும் சுவாமி, சரவணபவனே, தந்தைக்கு குருஸ்வாமியாக வந்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1179 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - சாமி, சுவாமி, தனத்தந், செய்யும், தனதன, தொண்டு, அடியார்கள், விளங்கும், எனக்கு, பெருமாளே, புகழினை, படிக்கும், டாகு, பிறவியை, திறமும்