பாடல் 1144 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...... ; தாளம் -
தத்த தனதனன தான தானதன தத்த தனதனன தான தானதன தத்த தனதனன தான தானதன ...... தனதான |
எத்தி யிருகுழையை மோதி மீனமதின் முட்டி யிடறியம தூதர் போலமுகி லெட்டி வயவர்கர வாளை வேல்முனையை ...... யெதிர்சீறி எத்தி சையினுமொரு காம ராஜன்மிக வெற்றி யரசுதனை யாள வீசியட லெற்றி யிளைஞருயிர் கோலு நீலவிழி ...... மடமாதர் வித்தை தனிலுருகி யாசை யாகியவர் கைக்குள் மருவுபொரு ளான ஆகும்வரை மெத்தை தனிலுருகி மோக மாகிவிட ...... அதன்மேலே வெட்க மிலைநடவு மேகு மேகுமினி மற்ற வரையழையு மாத ரேயெனமுன் விட்ட படிறிகள்தம் நேச ஆசைகெட ...... அருள்வாயே ஒத்த வரிகமுகு வாளை தாவுபுனல் அத்தி நகரமர சான வாள்நிருபன் ஒக்கு நினைவுமுனி லாமல் வாகுபெல ...... நிலைகூற உற்ற தருமனடல் வீமன் வேல்விசையன் வெற்றி நகுலசக தேவர் தேர்தனிலும் ஒத்து முடுகிவிடு பாகன் வாளமரி ...... லசுரேசன் பத்து முடிகள்துக ளாக வாகுஇரு பத்து மொருகணையில் வீழ நேரவுணர் பட்டு மடியஅமர் மோது காளமுகில் ...... மருகோனே பச்சை மயிலில்வரு வீர வேல்முருக துட்ட நிருதர்குல கால வானவர்கள் பத்தி யுடனடியில் வீழ வாழ்வுதவு ...... பெருமாளே. |
(முதல் 6 வரிகள் வேசையர் கண்களை வருணிக்கின்றன). இரண்டு குண்டலங்களையும் உதைத்து எறிதல் போலத் தாக்கி, மீன் பாய்வது போன்று சென்று (செவிகளை) முட்டித் தாக்கி, யம தூதுவர்களைப் போல விளங்கி, மேகத்தின் கரு நிறத்துடன் போட்டி இட்டு, போர் வீரர்களின் கையில் ஏந்திய வாளையும் வேல் முனையையும் எதிர்த்துச் சீறுவது போலக் கூர்மை உடையனவாய், எல்லா திக்குகளிலும் ஒப்பற்ற மன்மதராஜன் மிகவும் வெற்றியுடன் தனது அரசை எங்கும் ஆள விட்டது போலப் பரந்து, தமது வல்லமையைச் செலுத்தி, இளைஞர்களுடைய உயிரை வளைத்து இழுக்கும் கரிய கண்ணை உடைய அழகிய விலைமாதர்களின் சாமர்த்தியச் செயல்களால் உருக்கம் கொண்டு ஆசைப்பட்டு, அவர்கள் கைக்குள்ளே அகப்பட்டு, கைப்பொருள் செலவழிந்து போகும் வரை படுக்கையில் உள்ளம் உருகி, (பொருள் தீர்ந்த விட்ட காரணத்தால்) மோகம் முடிவு பெற, அதற்குப் பிறகு (இப்படி வெறும் கையுடன் வருவது) உமக்கு வெட்கமாக இல்லையா? வெளியேறும், போய்விடும் போய்விடும், இனி வேறு பேர்வழிகளை அழைத்து வாருங்கள், பெண்களே, என்று (சேடியர்களுக்குக் கட்டளை இட்டு) இவ்வாறு வீட்டு வாசலுக்கு முன்னாலிருந்து விரட்டிவிடும் வஞ்சனை எண்ணமுடைய வேசிகளின் மீதுள்ள ஆசை அற்றுத் தொலைய அருள் செய்வாயாக. ஒழுங்காக அமைந்த கோடுகளைக் கொண்ட கமுக மரத்தின் மீது வாளை மீன்கள் தாவிக் குதிக்கும் நீர் நிலைகளை உடைய (நாட்டின் தலைநகரான) அஸ்தினா புரத்தை ஆண்டுவந்த, வாள் ஏந்திய அரசனான துரியோதனன், சமாதானத்துக்கு உடன்படும் நினைவே முன்பு இல்லாமல், தனது தோள் பலத்தின் திடத்தையே (இறுமாப்புடன்) எடுத்துரைக்க, (போருக்கு) உடன்பட்ட, தருமன், பீமன், வேலேந்திய அருச்சுனன், வெற்றியே பெறும் நகுலன், சகாதேவன் ஆகிய பாண்டவர்களின் தேரினை மனமொத்துச் செலுத்திய சாரதியும் (கண்ணன்), வாட்போரில் ராவணனுடைய பத்துத் தலைகளும் பொடிபட, தோள்கள் இருபதும் ஒரே பாணத்தில் அற்று விழ, எதிர்த்து வந்த அசுரர்கள் யாவரும் அழிந்து இறக்கும்படி போரைச் செய்த கரிய மேகம் போன்றவனுமாகிய (ராமன்) திருமாலின் மருகனே, பச்சை மயிலின் மேல் ஏறிவரும் வீரனே, வேல் ஏந்தும் முருகனே, கொடுமையான அசுரர்கள் குலத்துக்கு காலனாகத் தோன்றியவனே, தேவர்கள் பக்தியுடன் திருவடியில் விழ, அவர்களுக்கு வாழ்வு உதவிய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1144 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வாளை, தத்த, தானதன, தனதனன, வேல், ஏந்திய, தனது, போய்விடும், அசுரர்கள், இட்டு, உடைய, கரிய, பச்சை, வெற்றி, எத்தி, தனிலுருகி, விட்ட, பெருமாளே, பத்து, தாக்கி