பாடல் 1143 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
த்விஜாவந்தி
தாளம் - ஆதி - 2 களை
தாளம் - ஆதி - 2 களை
தத்தன தனதன தானா தனதன தத்தன தனதன தானா தனதன தத்தன தனதன தானா தனதன ...... தனதான |
எட்டுட னொருதொளை வாயா யதுபசு மட்கல மிருவினை தோயா மிகுபிணி யிட்டிடை செயவொரு போதா கிலுமுயிர் ...... நிலையாக எப்படி யுயர்கதி நாமே றுவதென எட்பகி ரினுமிது வோரார் தமதம திச்சையி னிடருறு பேரா சைகொள்கட ...... லதிலேவீழ் முட்டர்க ணெறியினில் வீழா தடலொடு முப்பதி னறுபதின் மேலா மறுவரு முற்றுத லறிவரு ஞானோ தயவொளி ...... வெளியாக முக்குண மதுகெட நானா வெனவரு முத்திரை யழிதர ஆரா வமுதன முத்தமிழ் தெரிகனி வாயா லருளுவ ...... தொருநாளே திட்டென எதிர்வரு மாகா ளியினொடு திக்கிட தரிகிட தீதோ மெனவொரு சித்திர வெகுவித வாதா டியபத ...... மலராளன் செப்புக வெனமுன மோதா துணர்வது சிற்சுக பரவெளி யீதே யெனஅவர் தெக்ஷண செவிதனி லேபோ தனையருள் ...... குருநாதா மட்டற அமர்பொரு சூரா திபனுடல் பொட்டெழ முடுகிவை வேலா லெறிதரு மற்புய மரகத மாதோ கையில்நட ...... மிடுவோனே வச்சிர கரதல வானோ ரதிபதி பொற்புறு கரிபரி தேரோ டழகுற வைத்திடு மருமக னேவா ழமரர்கள் ...... பெருமாளே. |
(8 + 1) ஒன்பது தொளை வாயில்களை* உடைய பச்சை மண்ணாலாகிய பாத்திரம் (ஆகிய இந்த உடல்), நல் வினை, தீ வினை ஆகிய இரு வினைகளிலும் தோய்ந்து, மிகு பிணி இட்டிடை மிக்கு வரும் நோய்கள் ஒரு பொழுதினிலேனும் (உடலில்) உயிர் நிலைத்திருப்பதற்குத் தடைகள் செய்ய, எவ்வாறு மேலான நற் கதியை நாம் கரை ஏறி அடைவது என்று எள் பிளவுபட்ட அளவு கூட இதன் உண்மையை அறியாதவர்களாய் தங்கள் தங்களுடைய ஆசை போன வழியே துன்பத்தைத் தருகின்ற பேராசை என்கின்ற கடலில் வீழ்கின்ற மூடர்களின் தீயவழியில் நான் விழாமல், வலிமை கொண்டதான தொண்ணூற்று ஆறு தத்துவங்களை** முற்றிக் கடந்த அறிவுக்கு எட்டாத ஞானம் உதயமாகும்படியான விளக்கமானது வெளிப்பட, சத்துவம், இராசதம், தாமதம் என்ற முக்குணங்கள் அழிய, நான் நான் என்று எழுகின்ற ஆணவ உணர்ச்சியாகிய அந்த அடையாள முத்திரை அழிய, தெவிட்டாத அமுது என்னும்படியான முத்தமிழை தெரிந்து போதிக்க வல்ல (உனது) இனிய வாக்கால் உபதேசித்து அருளுவதும் ஒரு நாள் எனக்குக் கிட்டுமா? திடீரென்று (வாதித்து) எதிர்த்து நின்ற மகா காளியுடன் திக்கிட தரிகிட தீதோம் என்ற ஒரு ஓசையுடன் ஒப்பற்ற, விசித்திரமான, பல வகையதான, எதிர்நடனம் ஆடிய திருவடி மலர்களைக் கொண்ட சிவபெருமான், உபதேச மொழியாகிய பிரணவத்தின் உட்பொருளைச் சொல்லுவாயாக என்று கேட்க, முன்பு ஓதாமலே உணர வேண்டியதும், ஞான ஆனந்தமானதுமான மேலான ஞான ஆகாசமானதுமான பொருள் இதுதான் என்று அவருடைய வலது காதில் உபதேசித்து அருளிய குரு நாதனே, குறையற்ற வழியில் சண்டை செய்த சூரனாகிய தலைவனுடைய உடல் பொடிபட்டு அழிய வேகமாய் எதிர்த்து, கூரிய வேல் கொண்டு எறிந்திட்ட வளப்பம் பொருந்திய புயங்களைக் கொண்டவனே, பச்சை நிறம் கொண்ட அழகிய மயிலின் மீது நடனம் செய்பவனே, வஜ்ராயுதத்தைக் கையில் கொண்ட தேவர்கள் தலைவனாகிய இந்திரன், அழகு கொண்ட (ஐராவதம் என்ற) யானை, (உச்சைச்சிரவம் என்ற) குதிரை, தேர் இவைகளோடு பொலிவு பெற்று விளங்கும்படி அவனை வாழ வைத்த மருமகனே, வாழ்ந்து விளங்கும் தேவர்களின் பெருமாளே.
* ஒன்பது துவாரங்கள்: இரு செவிகள், இரு கண்கள், இரு நாசித் துவாரங்கள், ஒரு வாய், இரு கழிவுத் துவாரங்கள்.
* 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1143 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, கொண்ட, அழிய, நான், தத்தன, துவாரங்கள், தத்துவம், தானா, புறநிலை, உபதேசித்து, தத்துவங்கள், எதிர்த்து, மேலான, உடல், திக்கிட, முத்திரை, வாயா, தரிகிட, பெருமாளே, ஆகிய, பச்சை, ஒன்பது, வினை