பாடல் 1128 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தானா தத்தன தத்தன தானா தத்தன தத்தன தானா தத்தன தத்தன ...... தனதான |
ஆலா லத்தைய ழுத்திய வேல்போல் நற்குழை யைப்பொரு தாகா ரைத்தொடர் கைக்கெணும் ...... விழியாலே ஆளா மற்றவர் சுற்றிட மீளா மற்றலை யிட்டறி வார்போ கச்செயல் விச்சைகள் ...... விலைகூறிக் கோலா லக்கண மிட்டுவ ராதார் நெக்குரு கப்பொருள் கூறா கப்பெறில் நிற்கவு ...... மிலதானார் கூடா நட்புமு ரைத்திடு கேடா விட்டகல் மட்டைகள் கோமா ளத்துய ருட்பய ...... முறலாமோ பாலா மக்கட லிற்றுயில் மாலோ ரெட்டுத லைக்கிரி பால்பார் வைக்கள விட்டுமை ...... யுறுபோதிற் பார்மே லிக்கனு டற்பொறி யாய்வீ ழச்சுடும் வித்தகர் பாலா பத்தரி டத்தியல் ...... பயில்வோனே மேலா யத்தொடு திக்கடை மேவார் வெற்பொட ரக்கரை வேர்மா ளப்பொரு திட்டொளி ...... விடும்வேலா மேனா டர்ச்சிறை விட்டருள் மீளா விக்கிர மத்தொடு வேதா வைச்சிறை யிட்டருள் ...... பெருமாளே. |
ஆலகால விஷத்தை உள்ளுக்குள் அடக்கி வைத்துள்ள வேலாயுதத்தைப் போல இருந்துகொண்டு, அழகிய குண்டலங்களை வம்புக்கு இழுப்பது போல் (காது வரை) நீண்டு, தங்களுக்கு ஆகாதவர்களைத் தொடர்ந்து பின் சென்று பற்றுதற்கு எண்ணும் கண்களுக்கு அடிமைப்பட்டு, அவ்வாறு வசப்பட்டவர் தம்மைச் சூழ்ந்திருக்க, அவர்கள் (தங்கள் சூழ்ச்சியினின்று) மீண்டு வெளியே போக முடியாதவாறு, நுழைந்து ஏற்பாடுகள் செய்து, அவர்களது நல்லறிவு போகும்படி தொழில் வித்தைகளை விலைபேசி, தமது ஆடம்பரங்களை எல்லாம் ஒரு நொடிப் பொழுதில் காட்டி, மனம் உடைந்து உள்ளம் நெகிழ்வது போல் செய்து, தாங்கள் கேட்ட பொருளில் ஒரு பகுதியை மட்டும் பெற்றால், எதிரில் நின்று பேசுவதற்குக் கூடக் கிட்டாதவர்கள், அக நட்பு இல்லாமல் புற நட்புச் செய்யும் பயனிலிகள், அழிவுறும் வகைக்கு விட்டு விட்டு நீங்கும் பாவிகளாகிய விலைமாதர்களின் கொண்டாட்டத்தால் வரும் வேதனைப் பயத்தை நான் அடைதல் நன்றோ? திருப்பாற்கடலில் துயிலும் திருமால் முதலான தேவர்கள் சென்று சேர்ந்த சிறந்த கயிலைமலையை (காமனைச் சிவன்மேல் பாணம் எய்ய அனுப்பினோமே என்ன ஆயிற்று எனக்) கண் கொண்டு பார்த்து அளவிட்டும், அவர்கள் சந்தேகித்தும் இருந்த சமயத்தில் பூமியில் கரும்பு வேல் ஏந்திய மன்மதனுடைய உடல் தீப் பொறியாய் வெந்து விழும்படிச் சுட்டெரித்த ஞானியாகிய சிவபெருமானின் குழந்தையே, பக்தர்களிடம் இயல்பானஅன்பு காட்டிப் பழகுபவனே, முன்பு, கூட்டமாக நாலு திக்குகளிலும் சென்று நிரம்பிய பகைவராகிய அசுரர்களையும், அவர்கள் தங்கியிருந்த கிரெளஞ்சம், ஏழு மலைகள் அனைத்தையும் அடியோடு மாண்டு அழியும்படி சண்டை செய்து ஒளி வீசும் வேலாயுதத்தை உடையவனே, விண்ணோரைச் சிறையினின்றும் விடுவித்து அருள் செய்தவனே, நீங்காத வீரத்தோடு பிரமனைச் சிறையிலிட்டுப் பின்னர் அவனுக்கு அருளிய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1128 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தன, செய்து, சென்று, தானா, விட்டு, பெருமாளே, மீளா, பாலா, போல்