பாடல் 1127 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
கீரவாணி
தாளம் - திஸ்ர த்ருபுடை - 7
தாளம் - திஸ்ர த்ருபுடை - 7
தானாதன தானந் தனத்த தானாதன தானந் தனத்த தானாதன தானந் தனத்த ...... தனதான |
ஆராதன ராடம் பரத்து மாறாதுச வாலம் பனத்து மாவாகன மாமந் திரத்து ...... மடலாலும் ஆறார்தெச மாமண் டபத்தும் வேதாகம மோதுந் தலத்து மாமாறெரி தாமிந் தனத்து ...... மருளாதே நீராளக நீர்மஞ் சனத்த நீடாரக வேதண்ட மத்த நீநானற வேறின்றி நிற்க ...... நியமாக நீவாவென நீயிங் கழைத்து பாராவர வாநந்த சித்தி நேரேபர மாநந்த முத்தி ...... தரவேணும் வீராகர சாமுண்டி சக்ர பாராகண பூதங் களிக்க வேதாளச மூகம் பிழைக்க ...... அமராடி வேதாமுறை யோவென் றரற்ற ஆகாசக பாலம் பிளக்க வேர்மாமர மூலந் தறித்து ...... வடவாலும் வாராகர மேழுங் குடித்து மாசூரொடு போரம் பறுத்து வாணாசன மேலுந் துணித்த ...... கதிர்வேலா வானாடர சாளும் படிக்கு வாவாவென வாவென் றழைத்து வானோர்பரி தாபந் தவிர்த்த ...... பெருமாளே. |
பூஜை செய்வோரது ஆடம்பரத் தோற்றத்தைக் கண்டும், இடைவிடாது செய்யும் ஜபத்திலுள்ள ஆசையினாலும், தெய்வம் எழுந்தருள வேண்டிச் செய்யும் சிறந்த தகட்டு யந்திரங்களைக் கண்டும், (ஆறும் பத்தும் கூடிய) பதினாறு கால்கள் கொண்ட பெரிய மண்டபக் காட்சியாலும், வேதம், ஆகமம் இவை முழங்கும் இடத்தைக் கண்டும், யாகங்களுக்கு வேண்டிய நெருப்பில் இடும் சமித்துக்களைக் கண்டும் பிரமித்து அவற்றில் மயங்காமல், (அடியார்களின்) கண்ணீர் பெரிதாகப் பெருகும் அபிஷேகத்தைக் கொள்பவனே, சிறப்புமிக்க ஓம் என்னும் தாரக மந்திரத்துக்கு உரியவனே, மலைகளுக்கு உரியவனே, நீ என்றும் நான் என்றும் உள்ள த்வைத பாவம் நீங்க அத்வைத நிலையைப் பெற அன்னியம் இல்லாமல் உறவோடு நீ வா என்று இங்கு நீ என்னை அழைத்து கடல் போன்று பெரிதான ஆனந்த நிலையையும், உடனே பரமானந்தமாகிய முக்தி நிலையையும் தந்தருள வேண்டுகிறேன். வீரத்துக்கு இருப்பிடமானவனே, துர்க்கையும், சக்ர வியூகமாக வகுக்கப்பட்டு நிற்கும் காவல் கணங்களான பூதங்களும் மகிழ, பேய்க் கூட்டங்கள் பிணங்களை உண்டு பிழைக்கும்படியும், போர் புரிந்து, பிரமன் அபயம் என்று முறையிட்டுக் கூச்சலிட, அண்ட கூடம் பிளவுபட, சூரன் மாயமாக நின்ற மாமரத்தின் அடிவேரையே வெட்டி, வடவாக்கினியையும்*, நிலைத்த சமுத்திரங்கள் ஏழையும் குடித்து, பெரிய சூரனோடு செய்த போரிலே அவன் செலுத்திய அம்புகளை அறுத்தெறிந்து, பாணங்கள் தங்கும் இடமான வில்லையும் கூடவே வெட்டித் தள்ளிய ஒளி வேலனே, தேவலோகத்தை அரசாளும்படிக்கு வாருங்கள், வாருங்கள், வாருங்கள் என்று அழைத்து, தேவர்களின் பரிதபிக்கத்தக்க துக்கநிலையை நீக்கிய பெருமாளே.
* பிரளய காலத்தில் உலகம் அழியுமுன் வட துருவத்திலிருந்து வரும் நெருப்பு அலையை 'வடவாக்கினி' என்பர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1127 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கண்டும், தானந், தானாதன, வாருங்கள், தனத்த, என்றும், நிலையையும், உரியவனே, அழைத்து, செய்யும், சக்ர, குடித்து, பெருமாளே, பெரிய