பாடல் 1126 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
திலங்
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தானான தான தான தானன தானான தான தான தானன தானான தான தான தானன ...... தந்ததான |
ஆராத காத லாகி மாதர்த மாபாத சூட மீதி லேவிழி யாலோல னாய்வி கார மாகியி ...... லஞ்சியாலே ஆசாப சாசு மூடி மேலிட ஆசார வீன னாகி யேமிக ஆபாச னாகி யோடி நாளும ...... ழிந்திடாதே ஈராறு தோளு மாறு மாமுக மோடாரு நீப வாச மாலையு மேறான தோகை நீல வாசியு ...... மன்பினாலே ஏனோரு மோது மாறு தீதற நானாசு பாடி யாடி நாடொறு மீடேறு மாறு ஞான போதக ...... மன்புறாதோ வாராகி நீள்க பாலி மாலினி மாமாயி யாயி தேவி யாமளை வாசாம கோச ராப ராபரை ...... யிங்குளாயி வாதாடி மோடி காடு காளுமை மாஞால லீலி யால போசனி மாகாளி சூலி வாலை யோகினி ...... யம்பவானி சூராரி மாபு ராரி கோமளை தூளாய பூதி பூசு நாரணி சோணாச லாதி லோக நாயகி ...... தந்தவாழ்வே தோளாலும் வாளி னாலு மாறிடு தோலாத வான நாடு சூறைகொள் சூராரி யேவி சாக னேசுரர் ...... தம்பிரானே. |
அடக்க முடியாத மோகம் கொண்டு, பெண்களுடைய உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரையுள்ள அங்கங்களிலே கண்கள் ஈடுபடுவதால் காமுகனாகி மன விகாரம் அடைந்து குணம் கெட்டு, ஆசை என்ற பேய் என்னைக் கவர்ந்து ஆட்கொள்ள, நான் ஆசாரக் குறைவுபட்டவனாக, மிகவும் அசுத்தனாக, இங்கும் அங்கும் ஓடி தினமும் கெட்டழியாமல் இருக்க, பன்னிரண்டு தோள்களுடனும், ஆறு திருமுகங்களுடனும், நிறைந்த வாசனையுள்ள கடப்ப மலர் மாலையுடனும், ஆண் மயிலாகிய நீல நிறக் குதிரையுடனும், அன்பு பூண்டு பிற மக்களும் போற்றிப் புகழுமாறு, கேடுகள் நீங்க, நான் ஆசு* கவிகளைப்பாடியும், ஆடியும், தினமும் முன்னேறுமாறு, ஞானோபதேசத்தை எனக்குச் செய்ய வருவதற்கு நீ அன்பு கொள்ளக் கூடாதோ? (இதன் பின்பு சுவாமிகள் தேவியின் துதி செய்கிறார்). வாராகி, பெரிய கபாலத்தைக் கையிலே ஏந்தியவள், மாலையை அணிந்தவள், மகமாயி, ஆயி, தேவி, சியாமள நிறத்தினள், வாக்குக்கு எட்டாதவள், பராத்பரை, உள்ளத்தில் தங்குகிற தாய், சிவனுடன் வாதாடிய காளி, துர்க்கை, வனதேவதை, உமாதேவி, பெரிய பூமியிலே திருவிளையாடல்கள் புரிபவள், விஷத்தை உண்டவள், மஹா காளி, சூலத்தை ஏந்தியவள், பாலாம்பிகை, யோகினி, அழகிய பவானி, மகிஷாசுரமர்த்தனி, பெரும் திரிபுராந்தகி, அழகி, திருநீற்றை விபூதியாகப் பூசிய மேனியளான நாராயணி, திருவண்ணாமலையின் ஆதி தேவி, உலகநாயகி பெற்ற செல்வமே, தோள்கொண்டும் வாள்கொண்டும் போரிட்டுப் பகைமை பூண்டவனும், தோல்வியே இல்லாதவனும், தேவருலகைச் சூறையாடினவனுமான சூரனைக் கொன்றவனே, விசாகனே, தேவர்களின் பெருமாளே.
* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1126 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தேவி, தானன, மாறு, தானான, பெரிய, அன்பு, ஏந்தியவள், மிக்கது, காளி, தினமும், யோகினி, னாகி, வாராகி, தகிட, சூராரி, நான்