பாடல் 1109 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தத்ததன தானான தத்ததன தானான தத்ததன தானான ...... தனதான |
கட்டமுறு நோய்தீமை யிட்டகுடில் மாமாய கட்டுவிடு மோர்கால ...... மளவாவே கத்தவுற வோர்பாலர் தத்தைசெறி வார்வாழ்வு கற்புநெறி தான்மாய ...... வுயர்காலன் இட்டவொரு தூதாளு முட்டவினை யால்மூடி யிட்டவிதி யேயாவி ...... யிழவாமுன் எத்தியுனை நாடோறு முத்தமிழி னாலோத இட்டமினி தோடார ...... நினைவாயே துட்டரென ஏழ்பாரு முட்டவினை யாள்சூரர் தொக்கில்நெடு மாமார்பு ...... தொளையாகத் தொட்டவடி வேல்வீர நட்டமிடு வார்பால சுத்ததமி ழார்ஞான ...... முருகோனே மட்டுமரை நால்வேத னிட்டமலர் போல்மேவ மத்தமயில் மீதேறி ...... வருநாளை வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ வைத்தபடி மாறாத ...... பெருமாளே. |
துன்பத்தைத் தருகின்ற வியாதிகளும், பிற கேடுகளும் அமைந்துள்ள குடிசையாகிய இந்த உடல் உலக மாயையின் பந்தத்தை விடுகின்ற, உயிர் போகும் சமயத்தைத் தெரிந்துகொண்டு, சுற்றத்தாரும் குழந்தைகளும் கதறி அழ, ஆபத்து நிறைந்த நீண்ட வாழ்க்கையும், கற்பு நெறி ஒழுக்கத்துடன் சென்ற வழியும் அழியும்படியாக பெரிய யமன் அனுப்பின ஒப்பற்ற தூதுவர்களும் தாக்க, வினைகளால் மூடப்பட்டு விதியின்படியே உயிரை இழப்பதன் முன்பாக, உன்னைப் போற்றி தினமும் இயல், இசை, நாடகம் என்ற மூவகைப்பட்டத் தமிழால் நான் துதிக்க, விருப்பமுடனும் மகிழ்ச்சியுடனும் நன்றாக நீ நினைந்தருள்வாயாக. பொல்லாதவர்கள் என்று ஏழு உலகங்களில் உள்ளவர்களும் வேதனை உற்றுக் கூறும்படி தங்கள் கொடுந்தொழிலை நடத்திய சூரர்கள் தோல் கொண்ட, அகன்ற மார்பில் தொளை படும்படிச் செலுத்திய கூர்மையான வேல் வீரனே, ஊழிக்கூத்து செய்யும் சிவபெருமானுடைய பாலனே, பிழையற்ற தமிழை நன்கு அறிந்த ஞானமுள்ள முருகனே, நறு மணம் கொண்ட தாமரையில் வீற்றிருக்கும் நான்கு வேதங்களை ஓதும் பிரமனுக்கு விருப்பமான தாமரை மலர் போல, பத்மாசனத்தில் அமையும்படி செறுக்குற்ற மயிலின் மேல் நீ ஏறி வரும் நாளில், சேமித்து வைக்கப்பட்ட பொருள் போல் நாள்தோறும் அடியார்களை வாழ வைத்த கருணைத்திறம் நீங்காத பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1109 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்ததன, தானான, கொண்ட, முட்டவினை, பெருமாளே