பாடல் 1108 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதனா தனதனந் தனதனா தனதனந் தனதனா தனதனந் ...... தனதான |
வடிவவேல் தனைவெகுண் டிளைஞரா வியைவளைந் தமர்செய்வாள் விழியர்நெஞ் ...... சினில்மாயம் வளரமால் தனைமிகுந் தவர்கள்போ லளவிவந் தணுகுமா நிதிகவர்ந் ...... திடுமாதர் துடியைநே ரிடைதனந் துவளவே துயில்பொருந் தமளிதோய் பவர்வசஞ் ...... சுழலாதே தொலைவிலா இயல்தெரிந் தவலமா னதுகடந் துனதுதாள் தொழமனந் ...... தருவாயே படியெலா முடியநின் றருளுமா லுதவுபங் கயனுநான் மறையுமும் ...... பரும்வாழப் பரவையூ டெழுவிடம் பருகிநீள் பவுரிகொண் டலகையோ டெரிபயின் ...... றெருதேறிக் கொடியவா ளரவிளம் பிறையினோ டலைசலங் குவளைசேர் சடையர்தந் ...... திருமேனி குழையஆ தரவுடன் தழுவுநா யகிதருங் குமரனே யமரர்தம் ...... பெருமாளே. |
ஒளி வீசும் வேலாயுதத்தைப் போட்டியிட்டுக் கோபித்து இளைஞரது உயிரைச் சூழ்ந்து போர் செய்யும் வாள் போன்ற கண்களை உடையவர்களாய், உள்ளத்தில் வஞ்சனை எண்ணம் உண்டாகிப் பெருக, ஆசை மிக்கவர்கள் போல நடித்து, அளவளாவிப் பேசி வந்து, நெருங்கி பெரிய செல்வத்தைக் கைப்பற்றும் விலைமாதர்களின் உடுக்கை போன்ற இடை மார்பகங்களின் கனத்தினால் நெகிழ்ச்சி உறவே, தூங்குவதற்குப் பொருந்தியுள்ள படுக்கையில் சேர்க்கையில் ஈடுபடும் அவ்வேசையர்களின் வசத்தில் மனக் கலக்கம் அடையாமல், அழிதல் இல்லாத ஒழுக்க நெறியை அறிந்துகொண்டு வீணானது இன்னதெனத் தெரிந்து உனது திருவடிகளை வணங்க மனப் பக்குவத்தைத் தந்து அருளுக. உலகம் முழுதும் பரவி நின்று அருள் புரிகின்ற திருமால் பெற்ற பிரமனும், நான்கு வேதங்களும், தேவர்களும வாழும்பொருட்டு, பாற்கடலினின்றும் எழுந்த ஆலகால விஷத்தை உட்கொண்டு, பெரிய நடனத்தை பேய்களுடன் ஆடி, நெருப்பைக் கையில் ஏந்தி, (நந்தியாகிய) ரிஷப வாகனத்தின் மேல் ஏறி, கொடுமை வாய்ந்த ஒளி விடும் பாம்பு, இளம் பிறையுடன், அலை வீசும் கங்கை நீர், குவளை மலர் (இவைகள் சேர்ந்துள்ள) சடையர் ஆகிய சிவபெருமானுடைய அழகிய உடல் குழையும்படி அன்புடன் தழுவுகின்ற பார்வதி தேவி பெற்று அருளிய குமரனே, தேவர்களின் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1108 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனா, தனதனந், பெரிய, வீசும், குமரனே, பெருமாளே