பாடல் 1110 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தத்ததன தானான தத்ததன தானான தத்ததன தானான ...... தனதான |
பக்கமுற நேரான மக்களுட னேமாதர் பத்தியுடன் மேல்மூடி ...... யினிதான பட்டினுட னேமாலை யிட்டுநெடி தோர்பாடை பற்றியணை வோர்கூவி ...... யலைநீரிற் புக்குமுழு காநீடு துக்கமது போய்வேறு பொற்றியிட வேயாவி ...... பிரியாமுன் பொற்கழலை நாடோறு முட்பரிவி னாலோது புத்திநெடி தாம்வாழ்வு ...... புரிவாயே இக்கனுக வேநாடு முக்கணர்ம காதேவர் எப்பொருளு மாமீசர் ...... பெருவாழ்வே எட்டவரி தோர்வேலை வற்றமுது சூர்மாள எட்டியெதி ரேயேறு ...... மிகல்வேலா மக்களொடு வானாடர் திக்கில்முனி வோர்சூழ மத்தமயில் மீதேறி ...... வருவோனே வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ வைத்தபடி மாறாத ...... பெருமாளே. |
பக்கத்தில் சூழ்ந்து நிற்கும் நல்லொழுக்கம் நிறைந்த பிள்ளைகளும் மாதர்களும் அன்புடன் உடலின் மேல் மேன்மையான பட்டாடையால் மூடி, மாலையை அணிவித்து நீண்ட ஒரு பாடையைப் பற்றிக் கொண்டு அணைபவர்கள் கூவி அழ, அலை வீசும் நீரில் படிந்து முழுகி, மிஞ்சியிருந்த துக்கமும் நீங்கி விலக, மாற்றார்கள் போல நடந்துகொண்டு, உடலின் மீது பொன்னிறமான நெருப்பை மூட்ட, உயிர் நீங்கும் முன்பே, உனது அழகிய திருவடியைத் தினமும் உள்ளத்தில் அன்புடன் ஓதுகின்ற அறிவு பெருகும் வாழ்க்கையைத் தந்து அருளுக. கரும்பு வில்லை ஏந்திய மன்மதன் அழிந்து போகும்படி திருவுள்ளம் கொண்ட, (சூரிய, சந்திர, அக்கினி என்னும்) மூன்று கண்களை உடைய, மகா தேவராகிய சிவபெருமான், எல்லாப் பொருளும் எவ்விடமும் தாமாகவே நிற்கும் ஈசரின் பெரிய செல்வமே, ஆழம் காண முடியாத, மிகப் பரந்த கடல் வற்றவும், பழைய சூரன் இறந்து படவும், மேற் சென்று எதிரெழுந்த வலிமை வாய்ந்த வேலனே, மக்களும், விண்ணோர்களும், பல திசைகளிலும் உள்ள முனிவர்களும் சூழ்ந்து வர, களிப்பு மிகுந்த மயில் மீது ஏறி நகர்வலம் வருவோனே, சேமித்து வைத்த நிதியைப் போல விரும்பி தினந்தோறும் வந்து தொழும் அடியார்கள் வாழும்படி, அவர்கள் மேல் வைத்த கருணைத் திறம் நீங்காத பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1110 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்ததன, தானான, மேல், வைத்த, உடலின், மீது, நிற்கும், வருவோனே, பெருமாளே, சூழ்ந்து, அன்புடன்