பாடல் 1105 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் - ..... ;
தாளம் -
தானனா தத்தனத் தானனா தத்தனத் தானனா தத்தனத் ...... தனதான |
கோலகா லத்தைவிட் டாசுபா டக்கொடிக் கோவைபா டக்கொடிக் ...... கொடிவாதிற் கோடிகூ ளக்கவிச் சேனைசா டக்கெடிக் கூறுகா ளக்கவிப் ...... புலவோன்யான் சீலகா லப்புயற் பாரிசா தத்தருத் த்யாகமே ருப்பொருப் ...... பெனவோதுஞ் சீதரா சித்ரவித் தாரமே செப்பிடக் கேளெனா நிற்பதைத் ...... தவிர்வேனோ ஆலகா லப்பணிப் பாயல்நீ ளப்படுத் தாரவா ரக்கடற் ...... கிடைசாயும் ஆழிமா லுக்குநற் சாமவே தற்குமெட் டாதரூ பத்தினிற் ...... சுடராய காலகா லப்ரபுச் சாலுமா லுற்றுமைக் காகவே ளைப்புகக் ...... கழுநீராற் காதும்வே ழச்சிலைப் பாரமீ னக்கொடிக் காமவேள் மைத்துனப் ...... பெருமாளே. |
வீண் ஆடம்பரங்கள் செய்யாமல் ஆசு கவிகள் பாடவும், கொடிக்கவி, கோவை என்னும் ப்ரபந்த வகைக் கவிகள் பாடவும்*, காக்கைக் கூட்டங்கள் போலக் கூச்சலிடும் வாதத்தில் கோடிக் கணக்கான குப்பை போன்ற பயனற்ற கவிஞர்களின் கும்பலை வெல்வேன் என்று கீர்த்தியைக் கூறும் பெரு மழை போலக் கவிகள் பாடவும் வல்ல புலவன் நான். நியதியுடன் உரிய காலத்தில் பெய்யும் மேகம் என்றும், பாரிஜாத தெய்வ மரம் என்றும், கொடையில் மேரு மலை என்றும் (பரிசு பெறுவோர்கள்) போற்றுகின்ற திருமால் போன்றவனே, (உன் மீது) நான் சித்திரக் கவி, வித்தாரக் கவி* பாட, நீ கேட்பாயாக என்றெல்லாம் நான் (செல்வந்தர்களிடம்) நின்று காத்திருத்தலை ஒழிவேனோ? ஆலகால விஷத்தைக் கொண்டுள்ள பாம்பாகிய ஆதிசேஷன் என்னும் படுக்கையில் நீண்டு படுத்து, பேரொலி செய்யும் கடலின் மத்தியில் பள்ளி கொண்டிருப்பவனும், சக்ராயுதம் ஏந்தியவனுமான திருமாலுக்கும், நல்ல சாம வேதம் முதலான வேதத் தாமரையின் மேல் வீற்றிருக்கும் பிரமனுக்கும் எட்டாத உருவத்தில் ஜோதி வடிவான, காலகாலனான பிரபுவாகிய சிவ பெருமான் மிகுதியான ஆசை கொண்டு பார்வதியை மணக்கும் பொருட்டு, தக்க சமயத்தில் செங்கழு நீர் மலர் என்ற ஐந்தாவது பாணமாகிய நீலோற்பலம் என்னும் பாணம் கொண்டு (சிவபிரானைத்) தாக்கிய கரும்பு வில்லை எந்தியவனும், பெருமை வாய்ந்த மீன் கொடியைக் கொண்டவனுமாகிய மன்மதனுடைய மைத்துனனாகிய** பெருமாளே.
* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.96 வகைப் ப்ரபந்தங்களுள் கொடிக்கவி, கோவை இரு வகை.** மன்மதன் வள்ளி ஆகியோர் திருமாலின் மக்கள். வள்ளிக் கணவன் முருகன் மன்மதனுக்கு மைத்துனன் ஆகிறான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1105 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானனா, நான், என்னும், என்றும், கவிகள், தத்தனத், மிக்கது, கொண்டு, போலக், கொடிக்கவி, டக்கொடிக், பெருமாளே, பாடவும், கோவை