பாடல் 1104 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தானனா தந்தனந் தானனா தந்தனந் தானனா தந்தனந் ...... தனதான |
காதல்மோ கந்தருங் கோதைமார் கொங்கைசிங் காரநா கஞ்செழுங் ...... கனிவாய்கண் காளகூ டங்கொடுங் காலரூ பம்பொருங் காமபா ணஞ்சுரும் ...... பினம்வாழும் ஓதிகார் செஞ்சொல்மென் பாகுதே னென்றயர்ந் தோநமோ கந்தஎன் ...... றுரையாதே ஊசலா டும்புலன் தாரியே சென்றுநின் றோயுமா றொன்றையுங் ...... கருதாதோ தாதகீ சண்பகம் பூகமார் கந்தமந் தாரம்வா சந்திசந் ...... தனநீடு சாமவே தண்டவெங் கோபகோ தண்டசந் தானமா தெங்கள்பைம் ...... புனமேவும் தீதிலா வஞ்சியஞ் சீதபா தம்படுஞ் சேகரா தண்டையங் ...... கழல்பேணித் தேவிபா கம்பொருந் தாதிநா தன்தொழுந் தேசிகா வும்பர்தம் ...... பெருமாளே. |
காம ஆசையை எழுப்பும் மாதர்களின் மார்பகங்கள் அலங்கார மலைகள் என்றும், வாய் செவ்விய (கொவ்வைக்) கனி என்றும், கண்கள் ஆலகால விஷம், கொடிய யமனுடைய உருவம், போர் செய்யும் மன்மதனுடைய அம்பு என்றும், வண்டினங்கள் வாழும் கூந்தல் மேகம் என்றும், செவ்விய சொற்கள் இனிக்கும் வெல்லம், தேன் என்றும் (உவமைகள் சொல்லி) சோர்வடைந்து, ஓம் நமோ கந்தா என்று கூறாமல், அலைந்து கொண்டே இருக்கும் ஐம்புலன்கள் செல்லும் வழியிலேயே போய் அவ்வழியையே கடைப்பிடித்து அலைச்சல் ஓய்வுறும் படியான ஒரு வழியையும் என் உள்ளம் எண்ணாதோ? தாதகி, சண்பகம், கமுகு, சரக் கொன்றை, நறுமணமுள்ள மந்தாரம், குருக்கத்தி, சந்தனம் இவைகள் நிறைந்து விளங்கும் கரிய நிறத்தை உடைய வள்ளி மலையில், கொடிய கோபத்தை உடைய, வில்லை ஏந்திய, வேடர்கள் வம்சத்தில் வளர்ந்த பெண்ணாகிய வள்ளி எங்களுக்கு உகந்தவளாய் பசுமையான தினைப் புனத்தில் வாசம் செய்யும் குற்றமே இல்லாத வஞ்சிக் கொடி போன்ற வள்ளியின் அழகிய குளிர்ந்த திருவடிகள் படுகின்ற தலையை உடையவனே, பார்வதி தேவியின் ஒரு பாகத்தில் பொருந்தி உள்ள பழம்பொருளான சிவபெருமான் உனது தண்டையும் அழகிய கழலும் அணிந்த திருவடியை விரும்பித் தொழுத குரு மூர்த்தியே, தேவர்களுடைய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1104 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்றும், தானனா, தந்தனந், உடைய, வள்ளி, அழகிய, செய்யும், செவ்விய, சண்பகம், பெருமாளே, கொடிய