பாடல் 1106 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தானனா தத்தனத் தானனா தத்தனத் தானனா தத்தனத் ...... தனதான |
ஞாலமோ டொப்பமக் காளெனா நற்சொலைத் தீதெனா நற்றவத் ...... தணைவோர்தம் நாதமோ டுட்கருத் தோடவே தர்க்கமிட் டோயுநா யொப்பவர்க் ...... கிளையாதே நீலமே னிக்குலத் தோகைமே லுற்றுநிட் டூரசூர் கெட்டுகப் ...... பொரும்வேலா நேசமாய் நித்தநிற் றாளைநீ ளச்சமற் றோதநீ திப்பொருட் ...... டரவேணும் கோலவா ரிக்கிடைக் கோபரா விற்படுத் தானும்வே தக்குலத் ...... தயனாருங் கூறும்வா னப்புவிக் கூறுதீ ரக்குறிப் போதுறா நிற்பஅக் ...... கொடிதான காலன்மார் புற்றுதைத் தானுமோர் கற்புடைக் கோதைகா மக்கடற் ...... கிடைமூழ்கக் காவிசேர் கொத்தலர்ப் பாணமேய் வித்தகக் காமவேள் மைத்துனப் ...... பெருமாளே. |
உலகத்துடனே ஒத்து வாழுங்கள் மக்களே என்னும் நல்ல உபதேசத்தை கெட்டது என்று கருதி, நல்ல தவ நிலையில் பொருந்திய பெரியோர்களின் பேச்சின் ஒலியும், அவர்கள் சொன்ன புத்திமதியின் உண்மைக் கருத்தும் பின்னிட்டு ஓடும்படித் (தங்கள் கூச்சலில் அடங்க) அவர்களுடன் வாது பேசி, ஓய்ந்து போகும் நாய் போன்ற அறிவிலிகளிடம் அவர்கள் வாதுக்குத் தோற்றுப் போகாமல், நீல உருவம் விளங்கும், அடர்ந்த பீலிகளை உடைய, மயிலின் மேல் ஏறி, கொடுமையாளனான சூரன் அழிந்து சிதறும்படி சண்டை செய்யும் வேலனே, அன்புடன் நாள் தோறும் உனது திருவடிகளை நெடுநேரம் அஞ்சுதல் இல்லாமல் போற்றுதற்கு உரிய தர்ம சாஸ்திரப் பொருளை நீ எனக்குத் தர வேண்டும். அழகிய கடலின் மத்தியில் கோபம் நிறைந்த ஆதிசேஷன் என்னும் பாம்பின் மீது படுத்துள்ள திருமாலும், வேதம் ஓதும் குலத்துப் பிரமனும், புகழப்படுகின்ற வானத்திலும் பூமியிலும் உள்ளோருக்கு கெடுதல் வரா வழிக்கு ஒரு குறிப்பை போதித்துக் காட்டுவதற்காக, அந்தக் கொடியவனான யமனுடைய மார்பில் படும்படி உதைத்த சிவபெருமானும் ஆகிய இம்மூவரும், ஒவ்வொரு கற்பு வாய்ந்த பெண்ணுடன் (முறையே லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி என்ற பெண்களுடன்) கூடி ஆசைக் கடலின் இடையே முழுகும்படி, நீலோற்பலத்தின் கொத்தான மலர்ப் பாணத்தை எய்த வல்லமை படைத்த மன்மதனின் மைத்துனப்* பெருமாளே.
* மன்மதன் திருமாலின் மகன். முருகன் திருமால் மகளாகிய வள்ளியை மணந்தவன். எனவே முருகன் மன்மதனின் மைத்துனன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1106 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானனா, தத்தனத், மன்மதனின், முருகன், கடலின், என்னும், பெருமாளே, நல்ல