பாடல் 1100 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந் ...... தனதான |
அங்கதன் கண்டகன் பங்கிலன் பொங்குநெஞ் சன்பிலன் துன்பவன் ...... புகழ்வாரா அஞ்சொடுங் கும்பொதும் பொன்றையென் றுஞ்சுமந் தங்குமிங் குந்திரிந் ...... திரைதேடுஞ் சங்கடங் கொண்டவெஞ் சண்டிபண் டன்பெருஞ் சஞ்சலன் கிஞ்சுகந் ...... தருவாயார் தந்தொழும் பன்தழும் பன்பணிந் தென்றுநின் தண்டையம் பங்கயம் ...... புகழ்வேனோ கங்கையும் பொங்குநஞ் சம்பொருந் தும்புயங் கங்களுங் திங்களுங் ...... கழுநீருங் கஞ்சமுந் தும்பையுங் கொன்றையுஞ் சந்ததங் கந்தமுந் துன்றுசெஞ் ...... சடையாளர் பங்குதங் கும்பசுங் கொம்புதந் தின்புறும் பந்தவெங் குண்டர்தங் ...... குலகாலா பண்டிதன் கந்தனென் றண்டரண் டந்தொழும் பண்புநண் பும்பெறும் ...... பெருமாளே. |
(நான்) வசை கூறுபவன், கொடியவன், தகுதி இல்லாதவன், அன்பு எழுகின்ற உள்ளம் இல்லாதவன், துன்பத்துக்கு ஈடானவன், புகழைத் தராத ஐம்புலன்கள் தங்கியுள்ள குகையாகிய உடலை எந்நாளும் சுமந்து, எங்கும் திரிதலுற்று, உணவைத் தேடுகின்ற வேதனைத் தொழிலை மேற்கொண்ட கொடிய முரடன், ஆண்மை இல்லாதவன், மிக்க மனக் கவலை கொண்டவன், சிவந்த வாயிதழை உடைய விலைமாதர்களின் பணியாளன், குற்றம் உள்ளவன், உன்னைப் பணிந்து எப்போது உன்னுடைய தண்டை அணிந்த தாமரை போன்ற திருவடிகளைப் புகழ்வேனோ? கங்கை நதியும், பொங்கி எழும் விஷம் பொருந்திய பாம்புகளும், சந்திரனும், செங்கழுநீர் மலரும், தாமரையும், தும்பையும், கொன்றையும், எப்போதும் நறுமணம் கமழும்படி அணிந்த சிவந்த சடையை உடைய சிவபெருமானது இடப் பாகத்தில் வீற்றிருக்கும் பசிய பூங்கொம்பு போன்ற பார்வதி தேவி ஞானப்பாலைக் கொடுத்ததனால் மகிழும் ஞானசம்பந்த மூர்த்தியே, கொடிய சமணர்களுடைய கூட்டத்துக்கு நமனாய்த் திகழ்ந்தவனே, கலை வல்லவன், கந்த பிரான் என்று விண்ணுலகிலும், மண்ணுலகிலும் உள்ளவர்கள் தொழுது, பண்பும் உனது நட்பும் பெற்றுக் களிக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1100 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தனந், இல்லாதவன், உடைய, அணிந்த, சிவந்த, கொடிய, புகழ்வேனோ, பெருமாளே