பாடல் 1098 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதனன தானதத்த தனதனன தானதத்த தனதனன தானதத்த ...... தனதான |
நடையுடையி லேயருக்கி நெடியதெரு வீதியிற்குள் நயனமத னால்மருட்டி ...... வருவாரை நணுகிமய லேவிளைத்து முலையைவிலை கூறிவிற்று லளிதமுட னேபசப்பி ...... யுறவாடி வடிவதிக வீடுபுக்கு மலரணையின் மீதிருத்தி மதனனுடை யாகமத்தி ...... னடைவாக மருவியுள மேயுருக்கி நிதியமுள தேபறிக்கும் வனிதையர்க ளாசைபற்றி ...... யுழல்வேனோ இடையர்மனை தோறுநித்த முறிதயிர்நெய் பால்குடிக்க இருகையுற வேபிடித்து ...... உரலோடே இறுகிடஅ சோதைகட்ட அழுதிடுகொ பாலக்ருஷ்ண னியல்மருக னேகுறத்தி ...... மணவாளா அடலெழுது மேடுமெத்த வருபுனலி லேறவிட்டு அரியதமிழ் வாதுவெற்றி ...... கொளும்வேலா அவுணர்குலம் வேரறுத்து அபயமென வோலமிட்ட அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே. |
நடையாலும், அணிந்த உடையாலும் தமது அருமையைக் காட்டி நீண்ட ஒரு தெரு வீதியிலே உலாவி, வரும் ஆடவர்களைக் கண்களால் மயக்கி, அவர்களை அணுகி காம ஆசையை மூட்டி, மார்பகங்களை விலை பேசி விற்று, நைச்சியமான வழியில் இன்முகம் காட்டி நடித்து, பலவிதமான உறவுமுறைகளைக் கூறிக் கொண்டாடி, அழகு மிக்க வீட்டுக்கு அழைத்துச் சென்று, மலர்ப் படுக்கையில் இருக்கச் செய்து, மன்மதனுடைய சாஸ்திரத்தின் முறைப்படி பொருந்திக் கலந்து, உள்ளத்தை உருக்கி, கையில் உள்ள பொருளைக் கவரும் விலைமாதர்களின் மீது காம ஆசை பிடித்து நான் திரியலாமோ? இடையர்கள் வீட்டில் நாள் தோறும் உறியில் உள்ள தயிரும், நெய்யும், பாலும் குடிக்க, (தண்டிப்பதற்காக கண்ணனுடைய) இரண்டு கைகளையும் பிடித்து உரலுடன் சேர்த்து யசோதை அழுத்தமாகக் கட்ட, அப்போது அழுத கோபால க்ருஷ்ணனின் மிகுந்த அன்புக்கு உரிய மருகனே, குறப் பெண் வள்ளியின் மணவாளனே, வலிமை மிக்க (மந்திர மொழி) எழுதப்பட்ட ஏட்டினை பெருகி ஓடுகின்ற (வைகை நதியின்) நீரில் எதிர் ஏறச் செய்து, அருமை மிக்க தமிழ்ப் பாசுரத்தால் (சமணரை) வாதத்தில் (சம்பந்தராக வந்து) வெற்றி கொண்ட வேலனே, அசுரர் குலத்தை வேரோடு அறுத்து ஒழித்து, அடைக்கலம் என்று ஓலம் இட்ட தேவர்களைச் சிறையினின்றும் மீட்டுவித்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1098 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மிக்க, தானதத்த, தனதனன, பிடித்து, உள்ள, காட்டி, பெருமாளே, செய்து