பாடல் 1096 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன ...... தனதான |
விடமளவி யரிபரவு விழிகுவிய மொழிபதற விதறிவளை கலகலென ...... அநுராகம் விளையம்ருக மதமகுள முலைபுளக மெழநுதலில் வியர்வுவர அணிசிதற ...... மதுமாலை அடரளக மவிழஅணி துகிலகல அமுதுபொதி யிதழ்பருகி யுருகியரி ...... வையரோடே அமளிமிசை யமளிபட விரகசல தியில்முழுகி யவசமுறு கினுமடிகள் ...... மறவேனே உடலுமுய லகன்முதுகு நெறுநெறென எழுதிமிர வுரகர்பில முடியவொரு ...... பதமோடி உருவமுது ககனமுக டிடியமதி முடிபெயர வுயரவகி லபுவனம ...... திரவீசிக் கடககர தலமிலக நடனமிடு மிறைவர்மகிழ் கருதரிய விதமொடழ ...... குடனாடுங் கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக கடகமுட னமர்பொருத ...... பெருமாளே. |
விஷம் கலந்ததாய், ரேகைகள் பரவினதாய் உள்ள கண்கள் குவிய, பேச்சு பதற, அசைவுற்று வளையல்கள் கல கல் என்று ஒலிக்க, காம ஆசை உண்டாக, கஸ்தூரி அணிந்ததும், அரும்பு போன்றதுமான மார்பகத்தில் புளகம் உண்டாக, நெற்றியில் வியர்வை வர, அணிகலன்கள் சிதற, (தேன் நிறைந்த) மலர் மாலை நெருங்கியுள்ள கூந்தல் அவிழ்ந்து விழ, அணிந்துள்ள ஆடை விலக, அமுதம் பொதிந்துள்ள வாயிதழ் ஊறலை உண்டு விலைமாதர்களுடன் படுக்கையின் மீது ஆரவாரங்கள் உண்டாக காமக் கடலில் முழுகி பரவசம் அடையினும் உனது திருவடிகளை மறக்க மாட்டேன். கோபத்துடன் வந்த முயலகன்* என்னும் பூதத்தின முதுகு நெறு நெறு என்று முறிய, இருள் பரந்த நாக லோகமும் பாதாள முழுதும் ஒப்பற்ற அடி ஓடி உருவவும், பழமையான ஆகாயத்தின் உச்சி இடியவும், சந்திரனின் முடி நகரவும், (நடனத்தின் போது) உயரும் போது, சகல உலகங்களும் அதிர்ச்சி உறவும், வீசி கங்கணம் அணிந்த கைகள் விளங்க நடனம் செய்யும் சிவபெருமான் மகிழும்படியான அழகுடன், எண்ணுதற்கரிய வகையில் எழிலுடன் ஆடுகின்ற தோகைப் பட்சியாகிய மயிலை நடத்தி, அசுரர்களுடைய யானை, தேர், குதிரை, காலாட்படையுடன் போர் செய்த பெருமாளே.
* தாருக வனத்து முனிவர்கள் சிவனை வெறுத்து வேள்வி செய்தனர். பலி ஏற்க சிவன் அங்கு சென்றபோது, முனிவர்களின் மங்கையர் அவர் அழகைக் கண்டு மோகம் கொண்டனர். முனிவர்கள் கோபம் கொண்டு சிவனைக் கொல்ல ஒரு கொடிய வேள்வியை ஆற்றினர். வேள்வியில் ஒரு புலி எழுந்தது. புலியைக் கொன்று அதன் தோலை உடுத்துக் கொண்டார். வேள்வியிலிருந்து பின் மழு, மான், அரவம், பூதங்கள், வெண்டலை, துடி, முயலகன் என்ற பூதம், தீ இவைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றின. சிவன் முயலகனைத் தள்ளி மிதித்து நடனம் ஆடினார் .. சிவபுராணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1096 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, உண்டாக, பின், சிவன், முனிவர்கள், போது, பெருமாளே, நெறு, நடனம்