பாடல் 1093 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனனதன தனனதன தனனதன தனனதன தனனதன தனனதன ...... தனதான |
குடருமல சலமுமிடை யிடைதடியு முடையளவு கொழுவுமுதி ரமும்வெளிற ...... ளறுமாகக் கொளகொளென அளவில்புழு நெளுநெளென விளைகுருதி குமுகுமென இடைவழியில் ...... வரநாறும் உடலில்மண மலிபுழுகு தடவியணி கலமிலக வுலகமரு ளுறவரும ...... ரிவையாரன் பொழியவினை யொழியமன மொழியஇரு ளொழியஎன தொழிவிலக லறிவையருள் ...... புரிவாயே வடகனக சயிலமுத லியசயில மெனநெடிய வடிவுகொளு நெடியவிறல் ...... மருவாரை வகிருமொரு திகிரியென மதிமுதிய பணிலமென மகரசல நிதிமுழுகி ...... விளையாடிக் கடலுலகை யளவுசெய வளருமுகி லெனஅகில ககனமுக டுறநிமிரு ...... முழுநீலக் கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக கடகமுட னமர்பொருத ...... பெருமாளே. |
குடல், மலம், நீர் நெருங்கியதாய், இடையிடையே மாமிசமும் உடையதாய், அளவுக்கு ஏற்ப கொழுப்பும், ரத்தமும் நிறம் கெட்டு வெளுத்து குழம்பு போல் ஆக, கொள கொள என்று ஆகி கணக்கில்லாத புழுக்கள் நெளு நெளு என்று நெளிய, (அங்ஙனம்) உண்டாகும் ரத்தம் குமு குமு என்று பெருகும் வழியின் மத்தியில் வரும்போதே துர் நாற்றம் வீசும் தேகத்தில், நறு மணம் மிகுந்த புனுகு சட்டம் ஆகிய வாசனைப் பொருள்களைப் பூசி, அதன் மேல் ஆபரணங்கள் விளங்க உலக மக்கள் காம மயக்கம் கொள்ளும்படி வருகின்ற விலைமாதர்களின் மோகம் நீங்க, கர்ம வினையெல்லாம் விட்டு ஒழிய, மனம் ஒடுங்க, அஞ்ஞான இருள் அகல, யான், எனது எனப்படும் அகங்கார மகங்காரங்கள் நீங்குவதால் பெருகி எழும் ஞானத்தை அருள் புரிவாயாக. வடக்கே உள்ள பொன் மலையாகிய மேரு முதலிய மலைகள் என்னும்படி பெருத்த வடிவைக் கொண்டு மிக்க வலிமை வாய்ந்த பகைவர்களை பிளந்து எறியும் (திருமாலின்) ஒப்பற்ற சக்ராயுதம் (சுதர்சனம்) என்னும்படியும், சந்திரன் போல முற்றின வெண்மை நிறம் கொண்ட (பாஞ்ச சன்னியம் என்ற) சங்கு என்னும்படி விளங்கி, (மச்சாவதரத்தில்) மகர மீன்கள் உள்ள கடலில் முழுகி விளையாடி, கடல் சூழ்ந்த இந்த உலகை அளவிட (திரிவிக்கிரமனாக) வளர்ந்த மேக நிறத் திருமால் என்னும்படி, இந்த உலகமும் ஆகாய உச்சி முழுமையும் பொருந்தும்படி நிமிர்ந்து எழுந்ததும், முழு நீல நிறமுள்ள தோகையைக் கொண்டதுமான மயில் என்னும் பறவையை வலிவாகச் செலுத்தி, யானை, தேர், குதிரை, காலாட் படை ஆகிய நால்வகைச் சேனைகளுடன் போர் செய்த பெருமாளே.
முருகனின் வாகனமான மயிலின் சிறப்பை உணர்த்தி அதனை திருமாலுடன் ஒப்பிடும் பாடல் இது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1093 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனதன, என்னும்படி, ஆகிய, உள்ள, நெளு, பெருமாளே, நிறம், குமு