பாடல் 1089 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதனன தாத்த தனதனன தாத்த தனதனன தாத்த ...... தனதான |
இருவினைக ளீட்டு மிழவுபடு கூட்டை யெடுமெடென வீட்டி ...... லனைவோரும் இறுதியிடு காட்டி லழுதுதலை மாட்டில் எரியஎரி மூட்டி ...... யிடுமாறு கரியஇரு கோட்டு முரணெருமை மோட்டர் கயிறிறுக மாட்டி ...... யழையாமுன் கனகமணி வாட்டு மருவுகழல் பூட்டு கழலிணைகள் காட்டி ...... யருள்வாயே பருவமலை நாட்டு மருவுகிளி யோட்டு பழையகுற வாட்டி ...... மணவாளா பகைஞர்படை வீட்டில் முதியகன லூட்டு பகருநுதல் நாட்ட ...... குமரேசா அருமறைகள் கூட்டி யுரைசெய்தமிழ் பாட்டை அடைவடைவு கேட்ட ...... முருகோனே அலைகடலி லீட்ட அவுணர்தமை யோட்டி அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே. |
நல்வினை, தீவினை எனப்படும் இரு வினைகளால் உண்டாகும் கேடு உற்ற, இறந்து போன கூடான இவ்வுடலை, சீக்கிரம் எடுங்கள் என்று கூறி வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் கடைசியாகச் சுடு காட்டில் அழுது, தலைப்பக்கம் எரியும்படி நெருப்பை மூட்டி வைக்கும்படியாக, கரு நிறம் கொண்டதும், இரு கொம்புகளை உடையதும், வலிமை மிக்கதுமான எருமையுடன் வந்த மூர்க்கராகிய யமன் பாசக் கயிற்றை அழுத்தமாக மாட்டி என்னை அழைப்பதற்கு முன்பாக, பொன்னையும், ரத்தினத்தையும் கூட மங்கச் செய்வதாய், பொருந்தின கழல் சேர்ந்துள்ள திருவடிகள் இரண்டையும் காட்டி அருள் செய்வாயாக. உயர்ந்த வள்ளி மலை நாட்டில் (தினைப் புனத்தில்) இருந்த கிளிகளை ஓட்டிக் கொண்டிருந்த, (சுந்தரவல்லியாய் முன்னரே உன்னைக் குறித்துத் தவம் செய்தமையால்) பழைய உறவைப் பூண்டிருந்த குற மகள் வள்ளியின் கணவனே, பகைவர்களாகிய அசுரர்களின் பாசறையில் முற்றிய நெருப்பை ஊட்டுவித்த, ஒளி விடுவதான நெற்றிக் கண்ணைக்* கொண்ட குமரேசனே, அருமையான வேத மொழிகளைச் சேர்த்து உரைக்கப்பட்ட (சங்கத்) தமிழ்ப் பாடலை (திருமுருகாற்றுப்படையை) முற்ற முழுவதும் கேட்ட முருகனே, அலை வீசும் கடலில் கூட்டமாய் இருந்த அசுரர்களை விரட்டி ஓடும்படிச் செய்து, தேவர்களைச் சிறையினின்றும் மீள்வித்த பெருமாளே.
* முருகன் சிவனது அம்சமே ஆதலால், சிவனைப் போன்று அக்னி உள்ள நெற்றிக் கண் முருகனுக்கும் உண்டு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1089 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - காட்டி, தாத்த, தனதனன, நெருப்பை, நெற்றிக், பெருமாளே, இருந்த, வீட்டில், மூட்டி, மாட்டி, கேட்ட