பாடல் 1088 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதனனந் தானந் தனதனனந் தானந் தனதனனந் தானந் ...... தனதான |
குருதிசலந் தோலுங் குடலுடனென் பாலுங் குலவியெழுங் கோலந் ...... தனில்மாயக் கொடுமையுடன் கோபங் கடுவிரகஞ் சேருங் குணவுயிர்கொண் டேகும் ...... படிகாலன் கருதிநெடும் பாசங் கொடுவரநின் றாயுங் கதறமறந் தேனென் ...... றகலாமுன் கமலமலர்ந் தேறுங் குகனெனவும் போதுன் கருணைமகிழ்ந் தோதுங் ...... கலைதாராய் நிருதர்தளஞ் சூழும் பெரியநெடுஞ் சூரன் நினைவுமழிந் தோடும் ...... படிவேலால் நிகரிலதம் பாரொன் றிமையவர்நெஞ் சால்நின் நிலைதொழநின் றேமுன் ...... பொருவீரா பருதியுடன் சோமன் படியையிடந் தானும் பரவவிடந் தானுண் ...... டெழுபாரும் பயமறநின் றாடும் பரமருளங் கூரும் பழமறையன் றோதும் ...... பெருமாளே. |
ரத்தம், நீர், தோல், குடலுடன், எலும்பும் கொண்டு விளங்கி எழுகின்ற உருவமாகிய இந்த உடலில் மாயமாக அமைந்துள்ள கொடுமை அதனுடன் சினம், கடுமையான காம இச்சை இவை கூடிய குணத்தைக் கொண்ட உயிரை பிடித்துக் கொண்டு போகும்படி யமன் கருத்தோடு நீண்ட பாசக் கயிற்றைக் கொண்டு வர, அருகில் நின்று தாயாரும் கதறிப் புலம்ப, யாவையும் மறந்து விட்டேன் என்று சொல்லுவது போல் எல்லாவற்றையும் கை விட்டு நீங்குவதற்கு முன், இதயத் தாமரை மலர் பக்தி ரசத்தால் மலர, அதில் இருந்து விளங்கும் குக மூர்த்தி என்னும்படி நீ போந்து அருளி, உனது கருணைத் திறத்தை களிப்புடன் நான் போற்றும்படியான கலை ஞானத்தை எனக்குக் கொடுப்பாயாக. அசுரர்களுடைய சேனைகள் சூழ்ந்துள்ள பெரிய நெடிய சூரன் தனது நினைவையும் இழந்து போர்க்களத்தில் இருந்து ஓட்டம் பிடிக்கும்படியாக வேலாயுதத்தால் ஒப்பில்லாத சூரனை சம்ஹாரம் செய்ததைப் பார்த்திருந்த தேவர்கள் தமது மனத்திலேயே உன்னுடைய வீர நிலையைத் தொழும்படி போர்க்களத்தில் நின்று, முன்பு சண்டை செய்த வீரனே, சூரியனும், சந்திரனும், பூமியை (வராக உருவத்தில்) தோண்டிச் சென்ற திருமாலும் போற்றிப் பணிய (ஆலகால) விஷத்தைத் தானே உண்டு, ஏழு உலகங்களும் அச்சம் நீங்கி விளங்க, நின்று நடமாடுகின்ற மேலான சிவபெருமான் உள்ளம் மகிழும் பழைய வேதங்களை முன்பொருநாள் ஓதிநின்ற பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1088 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனனந், நின்று, தானந், கொண்டு, போர்க்களத்தில், இருந்து, பெருமாளே, சூரன்