பாடல் 1086 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனதனனந் தான தனதனனந் தான தனதனனந் தான ...... தனதான |
அகிலநறுஞ் சேறு ம்ருகமதமுந் தோயு மசலமிரண் டாலு ...... மிடைபோமென் றடியில்விழுந் தாடு பரிபுரசெஞ் சீர தபயமிடுங் கீத ...... மமையாதே நகமிசைசென் றாடி வனசரர்சந் தான நவையறநின் றேனல் ...... விளைவாள்தன் லளிதவிர்சிங் கார தனமுறுசிந் தூர நமசரணென் றோத ...... அருள்வாயே பகலிரவுண் டான இருவரும்வண் டாடு பரிமளபங் கேரு ...... கனுமாலும் படிகநெடும் பார கடதடகெம் பீர பணைமுகசெம் பால ...... மணிமாலை முகபடசிந் தூர கரியில்வருந் தேவு முடியஅரன் தேவி ...... யுடனாட முழுதுலகுந் தாவி எழுகடல்மண் டூழி முடிவினுமஞ் சாத ...... பெருமாளே. |
முழுவதுமாக நறுமணக் கலவையும் கஸ்தூரியும் தோய்ந்துள்ள (மார்பகங்களாகிய) மலைகள் இரண்டாலும் இடுப்பு ஒடிந்து போகும் என்று, பாதத்தில் விழுந்து ஒலிக்கின்ற சிலம்பின் செவ்விய சீர் பொருந்திய அபயக் கூச்சலிடும் இசை ஒலி போதாதென்று, (வள்ளி) மலைக்குப் போய் லீலைப் பேச்சுடன் விளையாடி, வேடர்களின் தவப்புதல்வியும், குற்றம் இல்லாத வகையில் இருந்து தினைப்பயிர் விளைவித்தவளும், ஆகிய வள்ளியின் ஒளிரும் நளினமும், அணிகளின் விளக்கமுமுள்ள அலங்காரமான மார்பில் அணையும் செந்நிறச் செல்வனே, உன்னை வணங்குகிறேன் என்று கூறி நான் உன்னைப் போற்ற அருள் புரிய வேண்டும். சூரியனும், சந்திரனும், வண்டுகள் விளையாடும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும், படிகம் போல் வெண்ணிறம் உடையதும், மிக்க கனம் கொண்டதும், மத நீர் கொண்டதும், பெருமை வாய்ந்ததும், கம்பீரமானதும், பருத்த முகத்தில் செவ்விய நெற்றியில் மணி மாலையும் முகத்தில் இடும் அலங்காரத் துணியும் உள்ளதும், புள்ளி முகத்தைக் கொண்டதுமான (ஐராவதம் என்னும்) யானை மீது வரும் இந்திரனும், (இவர்கள் முதலான யாவரும்) அழிவுறும் (யுகாந்த) காலத்தில் சிவபெருமான் பராசக்தியுடன் நடனம் செய்ய, உலகம் முழுதிலும் பரந்தெழுந்து ஏழு கடல்களும் நெருங்கிப் பொங்கும் முடிவு காலமாகிய ஊழிக் காலத்தும் (நல்ல சக்தியும் தீய சக்தியும் போராடி யுகத்தை முடிக்கும் காலத்தும்), அஞ்சாமல் விளங்கி நிலையாக நிற்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1086 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனனந், காலத்தும், சக்தியும், முகத்தில், கொண்டதும், பெருமாளே, செவ்விய