பாடல் 1067 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தந்த தனன தந்த தனன தந்த தனன ...... தனதான |
மைந்த ரினிய தந்தை மனைவி மண்டி யலறி ...... மதிமாய வஞ்ச விழிகள் விஞ்சு மறலி வன்கை யதனி ...... லுறுபாசந் தந்து வளைய புந்தி யறிவு தங்கை குலைய ...... உயிர்போமுன் தம்ப முனது செம்பொ னடிகள் தந்து கருணை ...... புரிவாயே மந்தி குதிகொ ளந்தண் வரையில் மங்கை மருவு ...... மணவாளா மண்டு மசுரர் தண்ட முடைய அண்டர் பரவ ...... மலைவோனே இந்து நுதலு மந்த முகமு மென்று மினிய ...... மடவார்தம் இன்பம் விளைய அன்பி னணையு மென்று மிளைய ...... பெருமாளே. |
பிள்ளைகள், இனிமை தரும் தந்தை, மனைவி (இவர்கள் யாவரும்) நெருங்கிக் கூச்சலிட்டு அழுது, அறிவு அழியும்படி, வஞ்சனை எண்ணத்தைக் காட்டும் கண்கள் முன் தோன்றி விளங்கும் யமன் தனது வலிய கையில் உள்ள பாசக் கயிற்றை வீசி எறிந்து என் உயிரை வளைக்க, என் மனமும், அறிவும் ஒரு வழியில் நிலைபெற்றுத் தங்காமல் அலைச்சல் கொள்ள, என் உயிர் போவதற்கு முன்பு பற்றுக் கோடாகவுள்ள உனது அழகிய திருவடிகளை எனக்குத் தந்து கருணை புரிவாயாக. குரங்குகள் குதித்து விளையாடும் அழகிய குளிர்ந்த (வள்ளி) மலையில் (இருந்த) வள்ளி நாயகியை அணைந்த மணவாளனே, நெருங்கும் அசுரர்களின் படை உடைந்து சிதறவும், தேவர்கள் போற்றவும், எதிர்த்துப் போரிட்டவனே, பிறைச் சந்திரன் போன்ற நெற்றியையும், அழகிய முகமும் கொண்டவராய், (உனக்கு) என்றும் இனியராயுள்ள தேவயானை, வள்ளி ஆகிய இரண்டு மாதர்களுக்கும், இன்பம் பெருகி உண்டாக அன்புடன் அணையும், என்றும் இளையோனாக விளங்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1067 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, அழகிய, தந்து, வள்ளி, விளங்கும், என்றும், பெருமாளே, மென்று, தந்தை, மனைவி, கருணை, இன்பம்