பாடல் 1068 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
மணிரங்கு
தாளம் - ஆதி
தாளம் - ஆதி
தனனா தனத்த தனனா தனத்த தனனா தனத்த ...... தனதான |
ஒழுகூ னிரத்த மொடுதோ லுடுத்தி உயர்கால் கரத்தி ...... னுருவாகி ஒருதாய் வயிற்றி னிடையே யுதித்து உழல்மாய மிக்கு ...... வருகாயம் பழசா யிரைப்பொ டிளையா விருத்த பரிதாப முற்று ...... மடியாமுன் பரிவா லுளத்தில் முருகா எனச்சொல் பகர்வாழ் வெனக்கு ...... மருள்வாயே எழுவா னகத்தி லிருநாலு திக்கில் இமையோர் தமக்கு ...... மரசாகி எதிரேறு மத்த மதவார ணத்தில் இனிதேறு கொற்ற ...... முடன்வாழுஞ் செழுமா மணிப்பொ னகர்பாழ் படுத்து செழுதீ விளைத்து ...... மதிள்கோலித் திடமோ டரக்கர் கொடுபோ யடைத்த சிறைமீள விட்ட ...... பெருமாளே. |
வழியும் மாமிசமும், ரத்தமும் சேர்ந்து, தோலால் மூடப்பட்டு, உயர்ந்த கால்கள் கைகள் இவற்றுடன் ஓர் உருவமாகி, ஒரு தாயினுடைய வயிற்றிலே தோற்றம் கொண்டு பிறந்து, அலைச்சலைத் தரும் மாயம் மிகுந்து வருகின்ற இந்த உடலானது பழமையடைந்து மூப்புற்று, மூச்சு வாங்குவதால் சோர்வு அடைந்து கிழவன் என்ற பரிதாப நிலையை அடைந்து, இறந்து போவதற்கு முன்பாக, அன்பு கலந்த உள்ளத்தோடு முருகா என்ற உன் திருப் பெயரைக் குறிக்கும் சொல்லை நான் சொல்லும்படியான வாழ்வை எனக்கு நீ அருள்வாயாக. விளங்கும் விண்ணுலகிலும், எட்டுத் திசையிலும் உள்ள தேவர்களுக்கு எல்லாம் அரசனாகி, அவர்கள் முன்னிலையில் விளங்கும் செருக்குள்ள மதயானையாம் ஐராவதத்தின் மீது இன்பகரமாக ஏறிவரும் வெற்றிநிலையுடன் வாழ்ந்த செழிப்பான அழகிய பொன்னுலகாம் அமராவதியைப் பாழ்படுத்தி, பெரும் தீயிட்டுச் சிதைத்து, அவ்வூரை மதில்போல வளைத்து, வலிமையுடன் அரக்கர்கள் கொண்டுபோய்ச் சிறையிலிட்ட தேவர்களின் சிறையை நீக்கி, அவர்களை விடுவித்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1068 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனா, தனத்த, அடைந்து, விளங்கும், முருகா, பரிதாப, பெருமாளே