பாடல் 1066 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனன தனன தனன தனன தனன தனன ...... தனதான |
பணிகள் பணமு மணிகொள் துகில்கள் பழைய அடிமை ...... யொடுமாதும் பகரி லொருவர் வருக அரிய பயண மதனி ...... லுயிர்போகக் குணமு மனமு முடைய கிளைஞர் குறுகி விறகி ...... லுடல்போடாக் கொடுமை யிடுமு னடிமை யடிகள் குளிர மொழிவ ...... தருள்வாயே இணையி லருணை பழநி கிழவ இளைய இறைவ ...... முருகோனே எயினர் வயினின் முயலு மயிலை யிருகை தொழுது ...... புணர்மார்பா அணியொ டமரர் பணிய அசுரர் அடைய மடிய ...... விடும்வேலா அறிவு முரமு மறமு நிறமு மழகு முடைய ...... பெருமாளே. |
அணிகலன்கள், பணம், அணியும் ஆடைகள், பழகி வந்த வேலை ஆட்கள், (இவர்களோடு) மனைவியும், சொல்லப் போனால், (இவர்களில்) ஒருவரும் கூட வருவதற்கு முடியாததான (இறுதிப்) பயணத்தில் உயிர் பிரிய, நற்குணங்களும், நல்ல மனமும் கொண்ட உறவினர் ஒன்று கூடி, விறகினிடையே இந்த உடலைப் போட்டு தீயிடும் துயரமான செயலைச் செய்வதற்கு முன்பாக, அடிமையாகிய நான் உனது திருவடியை என் உள்ளம் குளிர வாழ்த்தித் துதிக்கும்படியான திறமையைத் தந்து அருள்வாயாக. நிகரில்லாத திருவண்ணாமலை, பழநி ஆகிய தலங்களுக்கு உரியவனே, என்றும் இளமை வாய்ந்த இறைவனே, முருகனே, வேடர்கள் இடத்தே (தினை காக்கும் தொழிலில்) முயன்றிருந்த மயில் போன்ற வள்ளியை இரண்டு கைகளையும் கூப்பித் தொழுது, பின்பு தழுவிய திருமார்பனே, வரிசையாக நின்று தேவர்கள் பணிந்து வணங்க, அசுரர்கள் யாவரும் இறக்கும்படி வேலாயுதத்தை விடுவோனே, அறிவு, வலிமை, தருமநெறி, ஒளி, அழகு இவை உடைய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1066 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அறிவு, பெருமாளே, தொழுது, பழநி, குளிர, முடைய