பாடல் 1065 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
..... ; தாளம் -
தனன தனன தனன தனன தனன தனன ...... தனதான |
துயர மறுநின் வறுமை தொலையு மொழியு மமிர்த ...... சுரபானம் சுரபி குளிகை யெளிது பெறுக துவளு மெமது ...... பசிதீரத் தயிரு மமுது மமையு மிடுக சவடி கடக ...... நெளிகாறை தருக தகடொ டுருக எனுமி விரகு தவிர்வ ...... தொருநாளே உயரு நிகரில் சிகரி மிடறு முடலு மவுணர் ...... நெடுமார்பும் உருவ மகர முகர திமிர வுததி யுதர ...... மதுபீற அயரு மமரர் சரண நிகள முறிய எறியு ...... மயில்வீரா அறிவு முரமு மறமு நிறமு மழகு முடைய ...... பெருமாளே. |
துன்பமெல்லாம் ஒழியும். உனது தரித்திரம் நீங்கும். பிரசித்தி பெற்ற அமுதமாகிய தேவர் பருகும் உணவும், காமதேனுவும், (உலோகங்களைப் பொன்னாக்க வல்ல மந்திர சக்தி உள்ள) மாத்திரைகளையும், சுலபமாக நீ பெற முடியும். வாடுகின்ற எம்முடைய பசி அடங்கும்படியாக தயிரும் சோறும் எமக்கு இட்டால் அதுவே போதுமானது. அதைத் தந்து உதவுக. பொன் சரடு, கங்கணம், மோதிரம், (பொன்னாலாகிய) கழுத்து அணி இவைகளைத் தர வல்ல தாயித்து மந்திரத் தகட்டை (நான் தருவேன், அதை நீ) பெற்றுக் கொள்க. என்று கூறும் (கபட ரசவாதிகளின்) இந்த வகையான தந்திர மொழிகளிலிருந்து தப்பும் ஒரு நாள் எனக்குக் கிட்டுமோ? உயர்ந்துள்ளதும், தனக்கு ஒப்பில்லாததுமான கிரெளஞ்ச மலையின் நெஞ்சும் உடலும், அசுரர்களுடைய பெரிய மார்பும் ஊடுருவும் படியாக, மகர மீன்கள் உலாவுவதும், பேரொலி செய்வதும், இருண்டதுமான கடல் தனது வயிற்றின் உட்பாகம் கிழிய, சோர்வடைந்த தேவர்களின் காலில் இருந்த விலங்குகள் உடைபடச் செலுத்திய வேல் வீரனே. ஞானமும், வலிமையும், தரும நெறியும், ஒளியும், அழகும் உடைய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1065 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வல்ல, பெருமாளே