பாடல் 106 - பழநி - திருப்புகழ்

ராகம் - .....; தாளம் -
........
தனன தனதனன தந்தத்த தந்ததன தனன தனதனன தந்தத்த தந்ததன தனன தனதனன தந்தத்த தந்ததன ...... தந்ததான |
அதல விதலமுத லந்தத்த லங்களென அவனி யெனஅமரர் அண்டத்த கண்டமென அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென ...... அங்கிபாநு அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென அறையு மறையெனஅ ருந்தத்து வங்களென அணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு ...... சம்ப்ரதாயம் உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனிலி ருதய கமலமுகி ழங்கட்ட விழ்ந்துணர்வி லுணரு மநுபவம னம்பெற்றி டும்படியை ...... வந்துநீமுன் உதவ இயலினியல் செஞ்சொற்ப்ர பந்தமென மதுர கவிகளில்ம னம்பற்றி ருந்துபுகழ் உரிய அடிமையுனை யன்றிப்ப்ர பஞ்சமதை ...... நம்புவேனோ ததத ததததத தந்தத்த தந்ததத திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு ...... திந்திதோதி சகக சககெணக தந்தத்த குங்கெணக டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி தகக தகதகக தந்தத்த தந்தகக ...... என்றுதாளம் பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருக அகில நிசிசரர்ந டுங்கக்கொ டுங்கழுகு பரிய குடர்பழுவெ லும்பைப்பி டுங்கரண ...... துங்ககாளி பவுரி யிடநரிபு லம்பப்ப ருந்திறகு கவரி யிடஇகலை வென்றுச்சி கண்டிதனில் பழநி மலையின்மிசை வந்துற்ற இந்திரர்கள் ...... தம்பிரானே. |
அதலம் விதலம் முதலான அந்தக் கீழ்* ஏழு உலகங்கள் எனவும், இப்பூமி எனவும், தேவர்களின் அண்டங்களான மேல்* ஏழு உலகங்கள் எனவும், சகல கடல்கள் எனவும், எட்டுத் திசைகளிலுள்ள மலைகள் எனவும், அக்கினி, சூரியன், குளிர்ந்த கிரணங்களை உடைய சந்திரன் (என்னும் முச்சுடர்கள்) எனவும், ஒன்றோடு ஒன்று சந்தித்து ஒற்றுமைப்பட்ட மந்திரங்கள் எனவும், சிறப்பாக ஓதுகின்ற வேதம் எனவும், அருமையாகச் சொல்லப்படும் (96) தத்துவப் பொருள்கள்** எனவும், அணுவுக்குள் அணு எனவும், இங்ஙனம் எங்கும் நிறை பொருளாய் நின்றுள்ள ஒரு பேருண்மை, எனது உள்ளத்தில் தோன்றி விளங்கவும், அஞ்ஞானம் என்ற இருள் ஒழிந்து அந்தக் கணமே இதயத் தாமரை எனப்படும் மொட்டு அங்கே கட்டு நீங்கி, உணர்விலே உணரப்படும்படியான அநுபவ ஞானத்தை நான் பெற்றிடும் வகையை நீ முன்பு வந்து உதவி அருள, இடைவிடாத அன்பால் அருமையான இனிய சொற்களால் ஆன நூலாக, இசை வடிவப் பாக்களாகிய மதுர கவிகளில் மனம் ஆசை வைத்துத் திருப்புகழ் என்னும் சந்தப் பாவால் பாடும் உரிமைப் பாக்கியத்தைப் பெற்ற அடிமையாகிய நான் உன்னை அல்லால் இவ்வுலக வாழ்வினை நம்ப மாட்டேன். ததத ததததத தந்தத்த தந்ததத திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு திந்திதோதி சகக சககெணக தந்தத்த குங்கெணக டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி என்ற சந்தத்துக்கேற்ற தாளத்தில் பதலை திமிலை முதலிய பறைகள், தம்பட்டம் இவை ஒலிகளை எழுப்ப, எவ்விடத்திலும் உள்ள அசுரர்கள் நடுக்கம் கொள்ள, கொடிய கழுகுகள் (பிணங்களின்) பருத்த குடல்களையும் விலா எலும்புகளையும் பிடுங்க, போர்க்களத்து வெற்றிக் காளி களி நடனம் புரிய, நரிகள் ஊளையிட, பருந்துகளின் சிறகுகள் சாமரம் வீச, போரை வென்று மயிலின் மேல் பழனி மலை மீது வந்து அமர்ந்துள்ள, தேவர்களின் பெருமாளே.
* கீழ் உலகங்கள் ஏழு: அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம்.மேல் உலகங்கள் ஏழு: பூலோகம், புவலோகம், சுவலோகம், ஜனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்திய லோகம்.
** 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 106 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - எனவும், தந்தத்த, உலகங்கள், தத்துவம், தனதனன, தந்ததன, அந்தக், விதலம், அதலம், பதலை, டிண்டிடிடி, என்னும், தத்துவங்கள், புறநிலை, மேல், வந்து, டிண்டிட்டி, நான், தேவர்களின், டிடிடி, திதிதி, திதிதிதிதி, தந்ததத, ததததத, அகில, மதுர, திந்தித்தி, திந்திதிதி, சககெணக, குங்கெணக, திந்திதோதி, தந்தகுகு, தகுகு, தகுதகுகு, டிடிடிடிடி